4 மாவட்டங்களில் கனிமொழி எடுக்கும் சர்வே.. ஸ்டாலினுக்கு செல்லும் ரிப்போர்ட்.. பரபரக்கும் தென் மண்டலம்
சென்னை: தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தரப்பு புதிய சர்வே ஒன்றை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த சர்வே ரிப்போர்ட்டை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், இது வேட்பாளர்கள் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாகவும் கருதப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் திமுகவில் கனிமொழியின் கைகள் ஓங்கி இருக்கிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வென்ற கனிமொழி, கொஞ்சம் கொஞ்சமாக தென் மாவட்டங்களில் வளரத் தொடங்கினார். அதன்பின் நடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

அதேபோல் அண்ணா அறிவாலயத்திலேயே தனியறை ஒதுக்கும் அளவிற்கு கனிமொழி வளர்ந்தார். மக்கள் மத்தியில் செல்வாக்கும் அதிகரித்த நிலையில், தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனிமொழியின் பணிகள் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி அடங்கிய தென் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனால் கனிமொழியின் பணிகள் இன்னும் வீரியம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து திமுகவில் ஏராளமான அதிமுக, அமமுக நிர்வாகிகளை திமுக பக்கம் கொண்டு வர தொடங்கி இருக்கிறார். தற்போது 4 மாவட்டங்களில் கனிமொழி தரப்பு புதிய சர்வே எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே திமுகவுக்காக உதயநிதி ஸ்டாலின் தரப்பு ஒரு சர்வேவை எடுத்து வருகிறது.
மறுபக்கம் முதல்வர் ஸ்டாலினுக்காக பென் நிறுவனம் ஒரு சர்வேவை எடுத்து வருகிறது. தற்போது கனிமொழியும் தன்னுடைய அணியை வைத்து ஒரு சர்வேவை இந்த 4 மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். இந்த 4 மாவட்டங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம், செல்வாக்கு உள்ள வேட்பாளர்கள் யார், வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா, புதிய நிர்வாகிகளை நிறுத்தலாமா என்று தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 மாவட்டங்களில் மொத்தமாக 22 தொகுதிகள் உள்ளது. இந்த சர்வே ரிப்போர்ட்டை விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் வேட்பாளர் தேர்தலில் கனிமொழியின் சர்வேயும் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. திமுகவில் ஏற்கனவே வேட்பாளர்கள் தேர்வு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட சூழலில், சில தொகுதிகளில் மட்டும் கடைசி நேரத்தில் மாறக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications