தொகுதிகளை குறைப்பதாக திமுக சொல்லவில்லை.. சிபிஎம் வைத்த ஒரே கோரிக்கை இதுதான்.. பெ.சண்முகம் பேட்டி!
சென்னை: திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக பேச்சுவார்த்தைக் குழு தொகுதிகளை குறைப்பதாக கூறவில்லை என்று கூறிய பெ.சண்முகம், தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமை தரப்பில் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்றுள்ளன. அந்த வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தரப்பில் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தையை நடத்தியது.

இதன்பின் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சிபிஎம் கட்சி சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் என்று முன்பே கூறி இருந்தோம். அதன்படி இன்று திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் எங்கள் கட்சியின் சார்பாக நானும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், கண்ணன் பேசினோம்.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கூடுதலாக சில தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்,,. அதனை பேச்சுவார்த்தைக் குழுவிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் கலந்து ஆலோசித்து கூறுவதாக பதில் அளித்துள்ளனர். தற்போது தொகுதி பட்டியல் எதுவும் அளிக்கவில்லை. முதற்கட்டமாக தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்.
அதனபின்னர் தான் அடுத்தக் கட்டமாக எந்த தொகுதிகள் என்பதை பற்றி பேசவுள்ளோம். திமுக தரப்பில் தொகுதி எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது போன்ற எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலு சேர்த்தாலும், அது நல்லதுதான். விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.
மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும், அவர்களுக்கு எங்கள் எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த 6 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றனர். இதனால் இம்முறை எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications