தென் மாவட்டங்கள் இலக்கு.. புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக.. என்ன நடந்தது?
சென்னை: புதிய தமிழகம் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிக்க புதிய தமிழகம் கட்சி தங்கள் பக்கம் வந்தால் சரியாக இருக்கும் என்று திமுக தலைமை கருதுவதாகவும், 2 சீட்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்று 4 முனைப்போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. இதனால் 4 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தரப்பில் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கட்சி விலகினால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை திமுக தலைமை மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் சில மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருக்கிறது. இதனால் தேமுதிக, ஓபிஎஸ், தமிழர் தேசம் கட்சி உள்ளிட்டோரை திமுக தங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளது. தற்போது எஸ்டிபிஐ கட்சியும் திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கூடுதலாக பலத்தை அதிகரிக்க திமுக அடுத்த நகர்வை மேற்கொண்டு வருகிறது. அதாவது திமுக கூட்டணிக்குள் புதிய தமிழகம் கட்சியை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியுடன் அதிமுகவும் பேசி வருகிறது. ஆனால் அதிமுகவிடம் 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா என்று டிமாண்ட் வைத்துள்ளது.
இதனால் தேர்தல் தேதி அறிவித்த பின் புதிய தமிழகம் கட்சியுடன் பேசிக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் திமுக தரப்பில் 2 சீட் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க கேட்ட போது, தனிச் சின்னத்தில் போட்டி என்பதில் கிருஷ்ணசாமி உறுதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அதிகமிருக்கும் சூழலில், திமுக அவர்களை தங்கம் பக்கம் கொண்டு தீவிரமாக உள்ளது. இருந்தாலும் புதிய தமிழகம் கட்சியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும், விரைவில் கூட்டணி இறுதியாகும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications