விடியலை நீக்கிய விஜய்.. மகளிர் விடியல் பயணம் திட்ட பெயரை மாற்றிய தவெக அரசு.. என்ன நடந்தது?
சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரை மகளிர் பயணம் என்று மாற்றி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் முதல்வன், முதல்வர் படைப்பகம் என்ற திட்டங்களின் பெயர் மாற்றப்பட்ட சூழலில், மகளிர் விடியல் பயணத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தவெக ஆட்சி அமைக்கப்பட்டு 2 மாதங்களாகி இருக்கும் சூழலில், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டம் என்றும், முதல்வர் படைப்பகம் திட்டத்தின் பெயார் படைப்பகம் என்றும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் "மகளிர் விடியல் பயணம்" என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்து முதல்வராக ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் திட்டம் இந்த மகளிர் விடியல் பயணம் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான மகளிர் பயன் அடைந்து வருகின்றனர்.
மகளிர் விடியல் பயணம் மூலமாக வேலைக்கு செல்லும் மகளிருக்கு மாதத்திற்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேர்மிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகளை எளிதாக பெண்கள் அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு பேருந்திலும் மகளிர் விடியல் பயணம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.
தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஓடும் பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் என்ற பெயருக்கு பதிலாக மகளிர் பயணம் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பலகைகளிலும் மகளிர் பயணம் என்று மாற்றப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமாரி உள்ளிட்ட அத்தனை மாவட்டங்களிலும் ஒரே நாளில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பாக இதுவரை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியிடப்படவில்லை. ஏற்கனவே நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தின் போதும் கூட தமிழக அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications