திமுகவை வம்புக்கு இழுக்காதீர்... ராமதாசுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    MRK panneerselvam condemns ramadoss | ராமதாசுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம்

    சென்னை: திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அதிமுகவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக திமுக தலைவரை விமர்சித்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    "தன்னையும், தனது மகனையும் சிறையில் அடைத்து, வன்னியர் சமுதாயத்தை கேலியும் கிண்டலும் பேசிய அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கி, எங்கள் கழகத் தலைவரை விமர்சித்துள்ள மருத்துவரய்யா திரு ராமதாஸ் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏன் கோபம்?

    ஏன் கோபம்?

    மருத்துவரய்யா அவர்களுக்கு தி.மு.க.வின் மீது வந்த திடீர் கோபம் என்ன? "நமக்கு அடிமையாகக் கிடந்த வன்னியர் பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கலெக்டர்களாகவும், எஸ்.பி.களாகவும், க்ரூப்-1 அதிகாரிகளாகவும், டாக்டர்கள், எஞ்சினியர்களாகவும் ஆக்கி விட்டாரே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்" என்ற கோபமா? "காடுவெட்டி குருவை ஒரு முறைக்கு பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிடலைத்த அதிமுகவிற்குப் பதில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னியர் சமுதாயத்தினர் மீது பதிவு செய்த வழக்குகளை எல்லாம் தி.மு.க. ஆட்சி ரத்து செய்து விட்டதே" என்ற கோபமா?

    கோபிப்பது ஏன்?

    கோபிப்பது ஏன்?

    மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லி விட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதை சொன்னார்.

    வன்னியர் சமுதாய அதிகாரிகளை கல்வித்துறையிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் வைத்து அழகு பார்த்ததைச் சொன்னார். வன்னியர் சமுதாயப் பெருமைகளை பேசியதற்காக மருத்துவய்யா இப்படி கோபித்து- கொந்தளிப்பது ஏன்? தன்னை ஜெயிலில் போட்டவர்களுக்கும்- உடல்நிலை குன்றிப் போன நிலையிலும் அண்ணன் காடு வெட்டி குருவை அங்கும் இங்கும் பழுதான போலீஸ் வேனில் இழுக்கடித்தாரே - அந்த அதிமுகவிற்கு ஆதரவு திரட்டவா? "ஒவ்வொரு நீதிமன்றமாக அலைகழிப்பதற்கு பதில் என்னை ஒரே விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்" என்று ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் கதறினாரே அண்ணன் காடுவெட்டி - அந்த அதிமுக ஆட்சிக்கு ஆதரவு திரட்டவா? அல்லது, உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அதிமுகவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் "மகத்துவமும்தான்" இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது.

    வம்புக்கு இழுக்காதீர்

    வம்புக்கு இழுக்காதீர்

    அதிமுகவிற்கு விருந்து வையுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.வை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களை மட்டுமின்றி - பா.ம.க. நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் போட்டு நீதிமன்றங்களின் படிகட்டுக்களில் இன்றைக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திய அதிமுகவிற்கு சாமரம் வீசுங்கள். ஆனால் உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள்.

    பிரிந்துவிட்டனர்

    பிரிந்துவிட்டனர்

    "உங்களின் சொந்த லாபத்திற்காக எங்களை அடகு வைத்தது போதும்" என்று வன்னியர் சமுதாய மக்கள் என்றைக்கோ உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்கள். தி.மு.க.வை கூட்டணியை விட்டு சென்றதில் இருந்து தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் அருமைப் புதல்வரை தர்மபுரியில் தோற்கடிக்கப்பட்ட போதே பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்து விட்டது. இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறது. அதனால்தான் இப்போது தி.மு.க.வின் மீது வன்னியர் சமுதாயத்திற்கு இருக்கும் பற்றுதலை உடைக்க ஏதோ பழங்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

    ஒரே மேடையில்

    ஒரே மேடையில்

    எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் "போராட்டங்கள்" ஏதுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அளித்தவர். வன்னியர் சமுதாயத்தின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் யோசித்து ஆட்சியிலிருந்த போதெல்லாம் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர். அதை வேண்டுமென்றால்- ஒரு தனி மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் அருமைப் புதல்வரை அனுப்பி வையுங்கள். வன்னியர் சமுதாயத்திற்கு நன்மை செய்தது அதிமுகவா அல்லது தி.மு.க.வா என்று ஒரு விவாதத்தை நடத்திப் பார்ப்போம்.

    பொறுப்பில்லை

    பொறுப்பில்லை

    என்னைப் போன்று எத்தனையோ வன்னிய சமுதாயத்தினரை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக - ஏன் மத்திய அமைச்சராக உயர் பதவியில் பார்த்து அழகு பார்த்தவர் எங்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். திரு ஏ.ஜி. அவர்கள் உங்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். அவருக்கு பெருமை சேர்க்க எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது பற்றி இதுவரை தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த காலத்திலாவது நீங்கள் வாய் திறந்து கேட்டதுண்டா? ஏனென்றால் இந்த சமுதாயத்தில் வேறு யாருக்கும் சிறப்பு சேர்ப்பது தங்களுக்குப் பிடிக்காது. அதற்காக தி.மு.க. பொறுப்பாக முடியாது.

    நிறைவேற்றுவோம்

    நிறைவேற்றுவோம்

    ஆகவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் போவது நிச்சயம். அது கனவல்ல- நிஜம். அப்போது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்படி வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு அரிய சாதனைகளை செய்தாரோ, அதே போல் பல சாதனைகளை மட்டுமின்றி- அறிக்கை வாயிலாக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி- வன்னியர் சமுதாயத்திற்கு எங்கள் கழகத் தலைவர் பெருமை சேர்ப்பார். அந்த காட்சிகளை நீங்களும் காண்பீர்கள்! அப்போது நீங்கள் உணர மறுத்தாலும்- வன்னியர் சமுதாயப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+