ஆட்டம் ஆரம்பம்.. தேதி குறித்தது திமுக.. நாளை மதிமுக, பிப்.26-ல் மார்க்சிஸ்ட், 27ல் CPI உடன் பேச்சு!
சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதிகளை இறுதி செய்தது திமுக. மதிமுக உடன் நாளை (பிப். 23) பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 26 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 27 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

2026 சட்டசபை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கியது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக திமுகவில் டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள குழுவுடன் இன்று திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவை முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொகிதீன், நவாஸ் கனி, அப்துல் ரகுமான், அபூபக்கர், ஷாஜஹான் ஆகியோர் அடங்கிய குழு தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்க இருப்பதாக முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்கட்சிக்கு 2 சீட் ஒதுக்க திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளிலும் ஏணிச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இன்று ஐ.யூ.எம்.எல் உடன் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மதிமுக உடன் நாளை (பிப். 23) பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 26 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிப்.27ம் தேதி திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு தலா 2 ல் வெற்றி பெற்றன. இம்முறை அக்கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தாலும் கடந்த முறை அளித்த 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மதிமுக-வுக்கு மீண்டும் 6 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும், இல்லையென்றால் தொகுதி எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது. இது துரை வைகோவை அப்செட் ஆக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications