கப்சிப் திமுக.. ஹிந்துக்கள் விஷயத்தில் இப்படிதான்.. முக ஸ்டாலினை கேள்வி மேல் கேள்வி கேட்கும் காயத்ரி
திமுக அரசு மீது பாஜகவின் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்
சென்னை: பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பாஜக கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்... அத்துடன், இந்து பண்டிகைகள் வரும்போது மட்டும் திமுக ஊரடங்கு போடுகிறது... எப்போதும் இந்துகளுக்கு எதிராக தான் திமுகவினர் செயல்படுகிறார்கள் என்றும் காயத்ரி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.. எனவே, பொங்கல் பண்டிகை முடிந்தும் லாக்டவுன் போடலாமா என்று தமிக அரசு யோசனையில் உள்ளது.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது... இதில் பாஜக கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

பஞ்சாப் பயணம்
பிறகு செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி சொன்னதாவது: பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்கள்.. ஆனால் இப்போது வரை மக்களை ஏமாற்றி விட்டார்கள்.. மக்கள் இப்போதுள்ள அரசு மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்..

இந்து பண்டிகைகள்
இந்து பண்டிகைகள் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மட்டும் திமுக ஊரடங்கு போடுகிறது.. அவர்கள் எப்போதும் இந்துகளுக்கு எதிராக தான் செயல்படுகிறார்கள்.. கொரானா பரவலை காரணம் காட்டி கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிறு, கிழமைகளில் மூடியிருக்கிறார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை ஏன் திறந்து வைத்திருக்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குறிப்பாக விநாயகர் சதுர்த்தியின்போதும் காயத்ரி இதே கேள்வியைதான் திமுகவிடம் எழுப்பியிருந்தார்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.. 3வது அலை வரக்கூடிய சூழல் உள்ளதாக அப்போதே எச்சரிக்கை வந்திருந்தது.. அதனால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், எதிர்வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் பண்டிகைகளின் மூலம் கூட்டம் கூடுவதை கூட தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்தும் இருந்தது.. எனவேதான் மத்திய அரசு உத்தரவுப்படி, திமுக அரசு பிள்ளையார் சதுர்த்தி பேரணிக்கு தடை விதித்தது.

உதயநிதி ஸ்டாலின்
ஆனால், காயத்ரி நேரடியாகவே திமுக மீது பாய்ந்தார்.. "விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு... அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் திமுக திணிக்கிறது.. அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் வெகுவாக பாதிக்கிறது... இது, அவர்களின் வயிற்றில் அடிப்பது போல உள்ளது.. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும்போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்?" என்று காயத்ரி கேட்டிருந்தார்.

கேள்விகள்
இப்போதும் அதுபோலவே கேள்விகளை செய்தியாளர்களிடம் எழுப்பியுள்ளார்.. அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்.. அந்த ட்வீட்டில், "No wishes for Hindu's festivals, No Hindus votes. Hindus will not vote for DMK. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் இல்லை என்றால் இந்து வாக்குகள் இல்லை. இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது" என்று பதிவிட்டிருந்தார்..

கருவறை
இதற்கு ஏராளமானோர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "அக்கா, அப்படி வாழ்த்து சொல்லிட்டா எல்லா இந்துக்களையும் கோயில் கருவறைக்குள் அழைத்து செல்வீர்களா?" என்று ஒருவர் கேட்டுள்ளார்.. அதேபோல இன்னொருவரோ, "நான் இந்து தான்.. திமுக விற்கு தான் வாக்களிப்பேன்.. ஒருபோதும் பிஜேபி க்கு வாக்களிக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாக சொல்லி உள்ளார்.. இதனால் காயத்ரியின் ட்விட்டர் களமே படுபிஸியாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications