தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.. முதல்வரிடம் சீமான் வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை: அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத் தொகையை தீபாவளிக்கு முன்பே திமுக அரசு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு, விருந்து என ஏகப்பட்ட செலவுகள் இருக்கும். இதனால் பலரும் தீபாவளி போனஸ் போன்றவற்றை எதிர்பார்ப்பது வழக்கம். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி போனஸ் தொகை மிகவும் பயன்படும்.

இந்த ஆண்டு தீபாவளி மாதக் கடைசியில் வரும் நிலையில் பலரும் அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே அளித்தால் பரவாயில்லை என்று எண்ணுகின்றனர். பொதுவாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தங்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டிடக்கலை, தோட்டக்கலை உள்ளிட்ட பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில், தீபாவளி பரிசாக முதல்வர் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என்றும், அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும், பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு முன்பே ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும்.
ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால், தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
எனவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications