பிப்ரவரிக்கு குறி.. இன்டர்வியூ எல்லாம் வேண்டாம்.. நேராக களமிறங்கும் ஸ்டாலின்.. தயாரான வியூகம்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுக்காக ஆளும் திமுக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு திமுக வரும் நாட்களில் வேகமாக காய் நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றது. சட்டசபை தேர்தலை விட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மோசமான சரிவை சந்தித்தன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருட இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வருட இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை ஜனவரி இறுதியில் நடத்துவதற்கு தோதாக, இம்மாத இறுதியில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடலாமா என மாநில தேர்தல் ஆணையம் ஒரு ப்ரபோசலை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டம், பொங்கல் பண்டிகை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் என தொடர் நிகழ்வுகள் இருப்பதால் தமிழ்நாடு அரசு இப்போது தேர்தலை நடத்தும் திட்டத்தில் இல்லை.

பிப்ரவரி
அதன்படி பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதற்கேற்ப தேர்தல் தேதியை அறிவிப்பது குறித்து ஒரு முடிவு எடுங்கள். அப்போதுதான் நிர்வாக ரீதியாக தேர்தல் நடத்துவது எளிதாக இருக்கும் என்று அரசு தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாம். அநேகமாக, கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் முடிந்ததும் அல்லது பொங்கல் முடிந்ததும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

பட்ஜெட்
அடுத்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தி வேட்பாளரை திமுக அறிவிக்கும் நடைமுறை இந்த முறை இருக்காது என்கிறார்கள். அதாவது ஒவ்வொரு வேட்பாளராக நேர்காணல் செய்யப்பட மாட்டார்.

உளவுத்துறை
மாறாக வேட்பாளர்கள் குறித்த ரிப்போர்ட் உள்ளூர் அளவில் அதிகாரிகள், உளவுத்துறை மூலமாக பெறப்படும். இதை வைத்து நேர்காணல் இல்லாமல் மேயர் வேட்பாளர்களை நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து விடுவார் என்று அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications
