தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அன்னைத் தமிழ்மொழிக்குக் கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதி என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான வரலாறும், இலக்கிய ஆதாரங்களையும் தமிழ்மொழியைக் கொண்டுள்ளது.
பல மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிட்ட போதும், நமது தமிழ்மொழி காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. பல சிறப்புகளை கொண்டிருக்கும் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை உள்ளது.

தமிழ்மொழி
இந்த கோரிக்கையை முதல் முதலில் கடந்த 1902ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞர் எழுப்பினார், அதன் பிறகு மறைமலை அடிகள் தொடங்கி பல்வேறு தமிழறிஞர்களும், தலைவர்களும் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்தனர். நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு, கடந்த 2004ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவிலேயே செம்மொழி என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழாகும்.

ஸ்டாலின் அறிக்கை
இந்நிலையில், திமுக அரசு எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி - இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.

செம்மொழியான தமிழ்மொழி
பரிதிமாற்கலைஞரில் தொடங்கிப் பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகாலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கருணாநிதியின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தியும், பிரதமர் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்கும் தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது.

உலகின் மூத்த மொழி
உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும்.

ஆட்சி மொழியாக்கப் பாடுபடுவோம்
அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications