விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு.. புயல் வேகத்தில் திமுக!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது திமுக. பொன்முடி, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21ஆம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மற்ற கட்சிகள் போட்டியிடுவது பற்றியே இன்னும் முடிவு எடுக்காத நிலையில், வேட்பாளரையே அறிவித்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அர. சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், திமுக எம்.எல்.ஏ ஆர். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வரும் ஜூன் 14 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications