அதிமுகவுக்கு வழிவிட்டு.. 2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக? உடன்படாத உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் திமுக தலைமையின் முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தவெகவை வீழ்த்த அதிமுகவுக்கு வழிவிட்டு திமுக புறக்கணிக்கும் முடிவினை எடுக்கிறதா என்ற விவாதம் கிளம்பி இருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் அதிமுகவின் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் வென்றிருந்தனர். இவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதியாகும். இந்த தேர்தலில் தவெக, அதிமுக களமிறங்குவதை உறுதி செய்துவிட்டனர். ஆனால் திமுக தலைமை இன்னும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் தவெக அமைப்பு ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆட்சி அமைத்து 4 மாதங்கள் மட்டுமே ஆவதால், மீண்டும் திமுக, அதிமுக, தவெக என்று மும்முனைப் போட்டி நிலவினால், அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையக் கூடும் என்று திமுக தலைமை கருதுகிறது. இந்த 2 தொகுதிகளில் தவெகவை வீழ்த்தினால், விஜய்யின் பிம்பத்தை உடைக்க முடியும் என்று திமுக கருதுகிறது. இதனால் அதிமுகவுக்கு வழிவிட்டு திமுக ஒதுங்கி நிற்க ஆலோசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெக பக்கம் நிற்கிறார்கள். கூட்டணி பலமின்றி தனித்து போட்டியிட வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் உடன்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
விஜய்யின் பிம்பத்தை பார்த்து திமுக பயந்துவிட்டது, திமுக களத்தில் இல்லை என்ற நரேட்டிவ்வை கையில் எடுப்பார்கள் என்று கருதுகிறார். ஒருவேளை திமுக 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டால், மதுராந்தகம் தொகுதியில் விசிகவில் இருந்து அண்மையில் இணைந்த பனையூர் பாபுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே திமுக தலைமை நிர்வாகிகளுடன் நாளை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் வேட்பாளர்கள் தேர்வு, தேர்தலை சந்திக்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அறிவாலயத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
