நோட் பண்ணுங்க! "திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல்! திமுக அமைச்சரவையை பாருங்க புரியும்!"- எல்.முருகன்
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், திமுகவை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த இந்த கருத்தரங்கில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வி பி துரைசாமி, கரு நாகராஜன் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் அண்ணல் அம்பேத்கரின் சாதனைகள் மற்றும் பெருமைகள் குறித்து பேசினர்.

எல் முருகன்: இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கர் வழியில் மிக சிறப்பான ஒரு ஆட்சியை நமக்கு கொடுத்து வருகிறார். ஆனால், இங்கே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவினர் ஏதோ ஒட்டுமொத்த சமூக நீதியையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தவர்கள் என்பது போல பேசி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் என்ன நடந்தது. அங்கே மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் கூட மனித கழிவுகளை கலந்துள்ளனர். இதுதான் நீங்கள் சொல்லும் திராவிட மாடலா.. வேங்கைவயல் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னுமே இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை. இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்.
ஆன்மிக மாடல்: மேலும், கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவோம் என்று 20 ஆண்டுகளாக திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அங்கே எதுவும் நடந்ததாக தெரியவில்லை. உண்மையில் மோடி அரசால் மட்டுமே கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ்நாட்டிற்கு இப்போது ஆன்மிக மாடல்தான் வேண்டும். திராவிட மாடல் தோல்வியுற்ற மாடலாகவே இருக்கிறது.

திருமாவளவனுக்கும் இங்கே என்ன நடக்கிறது என தெரியும். அரசியல் காரணங்களுக்காக அவர் வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்து வருகிறார். திமுகவில் பாருங்கள்.. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள், அமைச்சரவையில் கடைசியில் உள்ளனர். அவர்களுக்கு ஏன் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பெரிய துறைகளை கொடுக்கவில்லை. அவர்களால் அதை கையாள முடியாதா என்ன.. இதுதான் போலி சமூக நீதி..
அதேநேரம் பாஜக ஆளும் பல மாநிலங்களில் பட்டியலின அமைச்சர்களும் கூட முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். சேலம் பகுதியில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரால் கூட கொடியேற்ற முடியவில்லை" என்று அவர் கடுமையாக சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications