"இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்”.. 2024 தேர்தலுக்கு திமுக எடுக்கும் அஸ்திரம்! இன்று முதல் பிரச்சாரம்
சென்னை: 2024 மக்களவத் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரத்தை திமுக தொடங்குகிறது.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024 - 2025 ஆம் ஆண்டுகான பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு முதல் தீர்மானத்தில் நன்றியுடன் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ்நாடு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் கலைஞர் கனவு இல்ல திட்டம், வறுமை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகள் வழங்கும் முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம் போன்றவற்றை குறிப்பிட்டு, அனைத்து தரப்பினர் பற்றியும் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு நபரும் பயன்படும் வகையில் பட்ஜெட் திட்டங்களை அறிவித்து, உலகமே திராவிட மாடலை பாராட்ட செய்து வரும் முதல்வரின் சீரிய நிர்வாகத் திறன், வழிகாட்டும் பாங்கையும் மனதார வாழ்த்தி நன்றி தெரிவிப்பதாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல் தீர்மானம் நிறைவேறியது.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதியன்று 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
2 வது வது தீர்மானத்தில் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 25 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதிப் பார்வையாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை தனித்தனியாக நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிப்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரம் குறித்து சில நிமிடங்களில் விளக்கி, மக்களவைத் தேர்தலில் பாஜக பற்றியும் அத்துடன் மறைமுகக் கூட்டணியில் உள்ள அதிமுகவை வீழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின் குரல் டெல்லியில் நிறைவேற உறுதிசெய்ய வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications