மோடியா, லேடியான்னு கேட்ட ஜெ.வுக்கு வாக்கு.. மோடியை "டாடி"ன்னு சொன்ன ராஜேந்திர பாலாஜிக்கு தோல்விமுகம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்து வருகிறார்
சென்னை: "மோடி எங்க டாடி"ன்னு சொன்னாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் இப்போது தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறார்.. 3500 ஓட்டில் அவருக்கு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது...!
இந்த வருடம் அதிமுக அமைச்சர்களிலேயே மறக்க முடியாதவர் ராஜேந்திர பாலாஜி.. இதற்கு காரணம், இவர் பாஜக அமைச்சரா? அல்லது அதிமுக அமைச்சரா என்று தமிழக மக்களே மண்டை குழம்பி போகும் அளவுக்கு பேசுபவர்..!
அதிமுகவை பாராட்டுகிறாரோ இல்லையோ, ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜகவையும் புகழ்ந்து பாராட்ட தவறியதே இல்லை.. அதிலும் இவர் விருதுநகரில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சை இப்போதும் மக்கள் மறக்க முடியாத அளவுக்கு உள்ளது..

அமைச்சர்
"டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி, உலக நாடுகளே பயப்படும் அளவுக்கு பலம் வாய்ந்தவராக இருக்கிறார்... வல்லரசு நாடுகளே அவரை பார்த்து பயப்படுகின்றன... ஒன்னே ஒன்னு சொல்றேன் கேளுங்க.. எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி பற்றி பேசினால், மக்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சி அடைவார்கள்... தமிழகத்தில் பாஜக தற்போது வளர்ந்த கட்சியாகிவிட்டது" என்று ஒரே போடாக போட்டார்.

வித்தியாசம்
அதுமட்டுமல்ல, நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறேன்... எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் உறுதிபட சொன்னார்.. ஆனால், இன்றைக்கு 3500 ஓட்டில் பின்தங்கி உள்ளார் ராஜேந்திர பாலாஜி.. இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்..!

செல்வாக்கு
கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜேந்திரபாலாஜி அமைச்சராகவே இருந்தவர்.. இந்த முறையும் இவருக்கு சீட் தரப்பட்டது.. ஆனால், சிவகாசி தொகுதியில் அவரது செல்வாக்கு மளமளவென சரியத் தொடங்கியது.. தொகுதியில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பிய நிலையில் கட்சி தலைமையிடம் பேசி தொகுதி மாறி அதாவது ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார்..

கவுதமி
இந்த ராஜபாளையம் தொகுதியைதான் தங்களுக்கு தரப் போகிறார்கள் என்று நினைத்து பாஜக இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்தது.. ராஜபாளையத்திலேயே தங்கி நடிகை கவுதமியும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால், ராஜேந்திர பாலாஜி திடீரென இங்கு களமிறங்கினார்.

ஸ்டாலின்
கடந்த காலங்களில் திமுகவை அதிக அளவு விமர்சித்த அமைச்சர்களில் ஒருவர் ராஜேந்திர பாலாஜி.. ஒருகட்டத்தில் ஸ்டாலினை ஒருமையில் பேசியவர்.. தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து பொதுவெளியில் ஆபாசமாகவும் திட்டியவர்.. நடந்து முடிந்த பிரச்சாரத்தில்கூட திமுகமீதான காழ்ப்புணர்ச்சியை இவர் கைவிடாத நிலையில், இன்று, அதே திமுகவிடம் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறார்..!

ஜெயலலிதா
மோடியா, இந்த லேடியா என்று ஜெயலலிதா அன்று கேட்டபோது, பாஜக மீது கோபத்திலும் அதிருப்தியிலும் இருந்த தமிழக மக்கள் அவருக்கு வாக்குகளை அள்ளி குவித்தனர்.. ஆனால் "மோடி எங்க டாடி" என்று ஜெ.பாணியிலேயே ரைமிங் பாடிய ராஜேந்திர பாலாஜிக்கோ அது சறுக்கலையே இன்று தந்து வருகிறது..!












Click it and Unblock the Notifications