234 தொகுதிகள்.. 4 பிரிவுகள்.. உடன்பிறப்புகளுடன் ‘ஒன் டு ஒன்’.. சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்
சென்னை: 2026 தேர்தலுக்கான பணியில் திமுக விறுவிறுப்பு காட்டுகிறது. மண்டல பொறுப்பாளர்கள் நியமித்த கையோடு தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டார். தொகுதிகளை 4 பிரிவுகளாக பிரித்து அவர்களுடன் ஸ்டாலினே நேரடியாக ஒன் டு ஒன் முறையில் நடக்கும் இந்த கூட்டத்தில் உடன்பிறப்புகளுக்கு நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக பரபரக்க தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருக்கும். 1984 ஆம் ஆண்டில் இருந்து (2016 தேர்தல் தவிர) இதே நிலை தான் தொடர்கிறது.

கடந்த 30 வருடங்களில் அதிமுக மட்டுமே கடந்த 2016 தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் மனநிலையில் திமுக இறங்கியுள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
இந்த முறையும் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் வலுவாக தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தவாக அங்கம் வகித்துள்ளன. திமுகவை எதிர்த்து அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளன. அந்தக் கூட்டணியில் தற்போதுவரை தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே உள்ளன.
பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. தனித்து போட்டியிடும் நாம் தமிழர், புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தவெக கட்சிகளும் திமுகவை தான் நேரடியாக எதிர்க்கின்றன. இதனால் திமுக தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து உரையாடும், உடன்பிறப்பே வா என்ற நிகழ்வு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விழுப்புரம், உசிலம்பட்டி, சிதம்பரம் தொகுதி திமுக நிர்வாகிகளிடம் உரையாடினார். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதி வாரியாக உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார்.
கள நிலவரம், நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். கடந்த முறை தோல்வியடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெறுவதற்கான பணிகளை செய்யுங்கள் என்று நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வை திமுக மிகவும் சீரியஸாக அணுகுகிறதாம்.இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "சட்டமன்ற தொகுதிகளை நான்கு பிரிவுகளாக வைத்துள்ளோம். அடர் பச்சை, இளம் பச்சை, ஆரஞ்ச், சிவப்பு என்ற வகையில் தொகுதிகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.
அடர் பச்சை என்றால் திமுக உறுதியாக வெற்றி பெறும் தொகுதி, இளம் பச்சை என்றால் திமுக வெற்றி பெறும் தொகுதி, ஆரஞ்சு என்றால் கடும் போட்டியுடன் கவனம் செலுத்த வேண்டிய தொகுதி, சிவப்பு என்றால் அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி என்ற அடிப்படையில் பிரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தொகுதி நிர்வாகிகளுடன் ஸ்டாலினே தனித்தனியாக ஒன் டூ ஒன் முறையில் ஆலோசனை நடத்துகிறார்.
கோஷ்டி பூசல் அதிகம் உள்ள தொகுதி நிர்வாகிகளை தலைவர் கடுமையாக எச்சரித்து அனுப்புகிறார். முதலில் கவனம் செலுத்தும் வேண்டிய தொகுதிகளை பார்த்துவிட்டு அதன் பிறகு மற்ற தொகுதிகள் குறித்தான ஆலோசனை நடைபெறும். அவர் சொன்னபடி 200 தொகுதிகளை கைப்பற்றுவது தான் எங்களின் இலக்கு" என்றனர்.












Click it and Unblock the Notifications