மார்ச் 1 ஸ்டாலின் பிறந்தநாள்! நீதிமன்றம் தோறும் கொண்டாடுவோம்! திமுக வழக்கறிஞர் அணி முடிவு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி அன்று நீதிமன்றம் தோறும் கொண்டாடுவோம் என திமுக வழக்கறிஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

*'எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாளான மார்ச்-1 அன்று கழக வழக்கறிஞர் அணியின் சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் மற்றும் நீதிமன்றம் தோறும் சிறப்பாக கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
*எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களுக்கு தேர்தல் பணிகளில் உதவிடும் வகையில் தி.மு.க. வழக்கறிஞர் அணியின் சார்பில் கழக மாவட்டங்கள்தோறும “வார் ரூம்” அமைப்பதற்கு உத்தரவிட்ட கழகத் தலைவர் அவர்களுக்கும் – கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
*திமுக வழக்கறிஞர் அணியினர் “இந்தியா கூட்டணி” வேட்பாளர்கள் அனைவரையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிடும் வகையில், தங்களுடைய பணிகளை கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அவர்கள் தலைமையில் முழுமூச்சுடன் சிறப்பாக பணியாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
*கழகத்தின் இரத்த நாளளங்களாக செயல்படும் இளைஞர் அணியின் செயலாளர் பொறுப்பு ஏற்ற நாள் முதல், தனது முத்திரைப் பதிக்கும் விதமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், அதற்கு முத்தாய்ப்பாக கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டில் எட்டு இலட்சத்திற்கும் மேலான இளைஞர்களை கலந்து கொள்ளச் செய்து, கழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற கழக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இந்த கூட்டம் மனதார பாராட்டுவதோடு, நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
*தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக ஆக்கிட, அல்லும் பகலும் அயராது உழைத்து வருவதோடு, அதன் ஒரு பகுதியாக ஸ்பெயின் நாட்டிற்கு பத்து நாள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து, வெற்றிப்பயணமாக முடித்து தாயகம் திரும்பிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை இக்கூட்டம் மனதார பாராட்டி, வாழ்த்துகிறது.
*தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக “கேலோ இந்தியா” விளையாட்டை இந்திய மாநிலங்களே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக தமிழ்நாட்டில் நடத்தி, அப்போட்டியில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தி, இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டியுள்ள கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை இந்த கூட்டம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.
*அல்லும் பகலும் அயராது நேர்மையான ஆட்சி நடத்தி வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் ஆட்சியில், எதிர்த்தரப்பினரும் குற்றம் குறை சொல்ல முடியாதளவிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் நீதிபதிகள் தேர்வு நடத்தி, அத்தேர்வில் தமிழ்நாட்டில் ஏழையெளிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் சிவில் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றவிருக்கின்ற் நிலையில், குறிப்பாக, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி எனும் மகளிரும் – அதைப்போலவே, பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை குடும்ப பின்னணியைக் கொண்ட தமிழ்வழியில் பயின்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், இச்சிவில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாக பொறுப்பேற்று மக்களுக்கு பணியாற்றிட இருப்பது, “எல்லோருக்கும் எல்லாம்” என்றும், “சொல்வதைச் செய்வோம், சொல்லாததைச் செய்வோம்” என்ற தாரக மந்திரங்களுடன், வறிய மக்களுக்காகவும் பணியாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் “திராவிட மாடல்” ஆட்சியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு, மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காக பணியாற்றி, தமிழ்நாட்டு மக்கள் வாழ்வை நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமுமாய் மேம்படுத்தி வரும் “திராவிட மாடல் ஆட்சி நாயகன்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
*ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகாரபூர்மற்ற அணிகளாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ., ஆகியவற்றின் செயல்பாடுகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
*திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் மிகச் சிறந்த 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக அரசு தாக்கல் செய்திருக்கிறது.
*ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு நிதிஒதுக்கீடு செய்வதில் வஞ்சிக்கின்ற நிலையிலும் - மிக நிதிநெருக்கடியான இக்காலகட்டத்தில், எதிர்த் தரப்பினரே பாராட்டும் வண்ணம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் – மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும் இக்கூட்டம் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
*தான் வகித்து வரும் பொறுப்புணர்ந்து பணியாற்றாமல், அரசியலமைப்புச் சட்டம் வகுத்த வழியின்படி நடக்காமல், எதேச்சாதிகாரத்துடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், நடைபெற்று வரும் தமிழ்நாட்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து வெளியேறிய ஆளுநர் அவர்களின் இச்செயலை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன்,
*நம் உயிரணைய “தமிழ்த் தாய் வாழ்த்து”ப் பாடலை, கழகத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
*கழகம் துவக்கப்பட்டபோது, தலைமைக் கழக அலுவலகமாக செயல்பட்டு வந்த சென்னை, இராயபுரம், அறிவகத்தில் தொடங்கி, அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம், அண்ணா அறிவாலயம் என அனைத்து கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக முன்னோடிகள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவராலும் அறியப்பட்டவரும் – முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் எண்ணங்களை செயலாக்கி, அவர்களின் பேரன்பைப் பெற்றவருமான தலைமைக் கழக துணை மேலாளர் என்.ஜெயக்குமார் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications