புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா?
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலை விட கூடுதலாக 10 கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இந்த முறை 165 தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த முறை, திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் கூடுதலாக 10 கட்சிகள்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுக இதுவரை இல்லாத அளவிற்கு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளை அப்படியே தக்க வைத்துக்கொண்ட திமுக புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சி என 10 கட்சிகளை கூடுதலாக இணைத்துக்கொண்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் இழுபறி
இதனால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து கொடுப்பதில் கடும் நெருக்கடியை திமுக தலைமை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் விஜய்யை காரணம் காட்டி கடந்த சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளது. 28 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட ஒரு தொகுதியை குறைத்து ஒதுக்கியுள்ளது.
கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதி எதிர்பார்த்ததால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் ஒரு தொகுதியை குறைத்து பெற்றுக்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் ஒப்புக்கொண்டது. அதேநேரத்தில் மற்றொரு இடது சாரி கட்சியான சிபிஎம் கட்சியுடன் இன்னும் தொகுதி பங்கீடு ஏற்படவில்லை.
தேமுதிக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?
கூடுதல் சீட் வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் சிபிஎம் இருப்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தாமதம் ஆகி வருவதால், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்காமல் திமுக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மிக முக்கிய கட்சியாக விசிக உள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடையூறு ஏற்படாத வகையில் விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை திமுக சாதுர்யமாக இறுதி கட்டத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியில் மிகவும் நம்பகமான கட்சியாக உள்ள விசிக, இந்த முறை 10 தொகுதிக்கு மேல் எதிர்பார்க்கிறதாம். அல்லது தேமுதிகவிற்கு வழங்கப்படுவதை விட கூடுதல் தொகுதி வழங்க வேண்டும் என்பதே திருமாவளவன் எதிர்பார்ப்பாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்த கையோடு ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்ற தேமுதிகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?
இதனால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக 165 தொகுதிகளுக்கும் குறைவாகவே இந்த முறை போட்டியிடும் நிலை ஏற்படும் எனத்தெரிகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கூட்டணியில் 10 கட்சிகளை புதிதாக இணைத்து இருப்பதால் சில தொகுதிகளை கூட்டணி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், கடந்த தேர்தலை விட குறைவான எண்ணிக்கையில் போட்டியிட வேண்டிய நிலையே திமுகவிற்கு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications