தங்க நகை லோன்.. காத்திருக்கும் ஆபத்து! திமுக எடுத்த முக்கிய முடிவு.. மதுரை கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: திமுக பொதுக்குழுவில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் தங்க நகை லோன் தொடர்பாக முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுக்குழு மேடையில் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தங்கம் நகை லோன்
இதில் தங்க நகை லோன் தொடர்பாக முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தங்க நகை அடகிற்கு எதிராக ஆர்பிஐ கொண்டு வந்த புதிய விதிகள் தற்காலிமாக நிறுத்தப்பட வேண்டும், இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமே.. இதில் தீவிரமாக போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் ஆர்பிஐ பின்வாங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் பரிந்துரைகளில் மாற்றங்களை செய்யாமல் அதை மொத்தமாக நீக்க வேண்டும் என்று திமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் போராட்டம்
முன்னதாக ஆர்பிஐ வரைவு விதிகளுக்கு எதிராக திமுக, சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சி தரப்பினர் போர்க்கொடி தூக்கி இருந்தனர். தி.மு.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் நேரடியாக சென்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பு நடத்தினார்.
முக்கியமாக நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குவதாகவும், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும் என்றும், அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது., என்று கூறி இருந்தார்.
ஆர்பிஐ வரைவு விதிகள் ஏன் ஆபத்தானது?
ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றன. தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றன. ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய விதிகளில் மாற்றங்களை செய்யும் வரை அதை அமல்படுத்த வேண்டாம் என்றும் நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications