அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு! திமுகவையும் விட்டு வைக்கலையே!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை அணிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே சமூக வலைதளங்களில் கருங்காலி மாலை பற்றிய பேச்சுகள் அதிகமாகத் தென்படுகின்றன. கருங்காலி எனப்படும் Ebony Wood-ல் செய்யப்பட்ட மாலையை அணிந்தால் தீய சக்திகள் நீங்கும், ஆன்மிக பலம் கிடைக்கும், பணம் சேரும், அதிர்ஷ்டம் வரும் என பல்வேறு விஷயங்கள் கூறப்படுகின்றன. கருங்காலி மாலையின் சிறப்புகள் எனக் கூறி பல வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகின்றன.

கருங்காலி ட்ரெண்ட்: நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என பல சினிமா பிரபலங்கள் கருங்காலி மாலை அணிந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால், அவர்களது ரசிகர்கள் பலரும் கருங்காலை மாலைகளை வாங்கி அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக கருங்காலி மாலை விற்பனையுயும் சூடு பிடித்துள்ளதாகத் தெரிகிறது.
கருங்காலி மரங்கள் உறுதியானவை என்பதால், தடிகள், உலக்கைகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடவுள் சிலைகளும் செய்யப்படுகின்றன. இதையொட்டியே, இது ஆன்மீகத் தன்மை வாய்ந்தது எனக் கூறி வியாபாரத்தில் இறங்கிவிட்டனர். இதனால், கருங்காலி மரத்தில் செய்யப்படும் பொருட்களின் மவுசு அதிகரித்து தற்போது ஆயிரங்களில் விற்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ஐ பெரியசாமிக்கு கருங்காலி மாலை: கருங்காலி மாலை வியாபாரம் திமுகவையும் விட்டு வைக்கவில்லை. திமுக அமைச்சர் கே.என்.நேரு, தனது கருங்காலி மாலைய சக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு தொடர்பாகவும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இளைஞரணி மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு செயல்படுவார் என்றும் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
அன்போடு கருங்காலி மாலை போட்டுவிட்ட கேஎன் நேரு: இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு. அதன்பிறகு, அமைச்சர் நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலை மாலை பற்றி கேட்டுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி. "இது வெள்ளி கருங்காலி மாலை" என கே.என்.நேரு சொல்ல, எனக்கு வைரத்தில் கருங்காலை மாலை வேண்டும் என ஐ.பெரியசாமி கிண்டலாக கூறியுள்ளார்.
உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றிய அமைச்சர் நேரு, "பரவாயில்ல, இதை மாட்டிக்கங்க" எனக் கூறி ஐ.பெரியசாமி கழுத்தில் அணிவித்தார். ஐ.பெரியசாமி அதை திருப்பிக் கொடுக்க முயன்றபோது, "உங்களுக்குத்தான் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது.. நீங்களே போட்டுக்கங்க" எனக் கூறிய நேரு, அவரை கழற்ற விடவில்லை. இதையடுத்து, இருவரும், அவரவர் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றனர். பகுத்தறிவு பேசும் திமுகவினர், கருங்காலி மாலை அணிந்துள்ளது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications