போதை ஒழிப்பு பயங்கர உருட்டு.. மதுவால் தவெக அரசுக்கு 5,000 கோடி வருமானம்.. மார்க்கண்டேயன் புகார்
தூத்துக்குடி: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் உருண்டோடிவிட்டன. மது விலக்கை அமல்படுத்துவோம் என கூறிய தவெக ஆட்சிக்கு வந்ததும் 707 டாஸ்மாக் கடைகளை மூடியது. ஆனால் திமுக, அதிமுக பாணியில் தவெகவும் மதுவிற்பனையை ஊக்குவிப்பதாக புகார் உள்ளது. பட்ஜெட் தாக்கலில் மது விற்பனையால் ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்குமென கூறியிருப்பதை திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்த விமர்சனத்தால் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தூத்துக்குடியில் மார்க்கண்டேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆன்லைனிலேயே மதுவிற்பனை கொண்டு வந்துவிட்டார்களா. ஆட்சிக்கு வந்ததும் 750 மதுக்கடைகளை அடைப்போம் என இந்த அரசு கூறியது. நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும் என்பார்கள்.

மதுவால் ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய்
அதேபோல மதுவை படிப்படியாக குறைப்போம் என்றவர்கள், மதுவால் ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று இந்த வருட பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளனர். 750 கடைகளை மூடுகிறார்கள். மதுவினால் ரூ.5,000 கோடி கூடுதலாக வருமானம் வருகிறது. போதையை ஒழிப்பதற்காக தவெக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள். இளைஞர்களை போதையில் இருந்து மீட்போம் என்றார்கள். தவெக அமைச்சர்கள் போதையில் கிரிக்கெட் போட்டி பார்த்த வீடியோ எல்லாம் பார்த்தோம். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்களின் ஆட்சி மதுவை இளைஞர்களின் பாதைக்கு கொண்டு செல்வதாக உள்ளது. இது எப்படி போகிறது என்பதை நீங்கள் தான் பார்க்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு கொலை நடந்துள்ளது. அதில் இருக்க கூடிய சி.டியை பார்க்கும்போது, ஜனநாயகன் படத்தில் எப்படி ஒரு ரத்தத்தை நாக்கில் தடவுகிறார்களோ, அதே பாணியில் செய்திருப்பதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீங்கள் தான் நாளிதழ், தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். அதை நான் பார்த்தேன்.
வேதனை தருகிறது
ஓமந்தூர் ராமசாமி, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின் என்று தமிழகத்தை பக்குவப்பட்ட தலைவர்கள் ஆண்டுள்ளனர். இந்த இளைஞர்களை, இளம் பெண்களை, அவர்களை வளர்க்கிற சந்ததியினரை காக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சியான எங்களுக்கு உள்ளது. எங்கு எதிர்க்கட்சி குரல் ஓங்கி ஒலிக்கிறதோ அந்த நாடு நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அந்த வகையில் இந்த அரசு இளைஞர்கள், விவசாயிகள், வருங்காலத்தை காக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரு விஷயத்தை கடைபிடிக்கிறார்கள். மதுவை முழுமையாக ஒழிப்பதைவிட, படிப்படியாக குறைத்து, இளைஞர்களை பக்குவப்படுத்தி கண்காணிப்பது தான் சிறந்தமுறை. பட்ஜெட்டில் அதற்காக திட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். விவசாயம், பாசனம், கனிமவளம், மின்சாரம் என்று வருமானத்திற்கு பல வழிகள் இருப்பதாக இந்த அரசு கூறியது. இத்தனை வழிகளை அடைத்துவிட்டு, மது வருமானத்தை மட்டும் ஊக்குவிப்பது எனக்கு வேதனையை தருகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
