உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்? ரொம்ப காலம் இல்லை.. கொதிக்கும் உதயநிதி.. காரமான விமர்சனம்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். கடந்த செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் மூலம் இந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக தவிர அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.
மசோதா தாக்கல் செய்யப்பட்டு சரியாக 4 மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்த மசோதாவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருக்கிறார்.

ஆளுநர் மசோதா
இந்த நிலையில் ஆளுநர் திருப்பி அளித்த மசோதாவை மீண்டும் திருப்பி சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பும் முடிவில் திமுக உள்ளது. இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அவர் தவறு செய்துவிட்டார். நாங்கள் மீண்டும் இதே மசோதாவை ஆளுநருக்கு திருப்பி அனுப்புவோம். அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

விதி என்ன
பொதுவாக ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், அல்லது கிடப்பில் போடலாம், அல்லது மீண்டும் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். இதில் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதை மீண்டும் மாநில அரசு சட்ட மசோதாவாக நிறைவேற்றலாம். ஒருவேளை அப்படி மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டால் அதை கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
அதாவது கண்டிப்பாக மசோதாவை ஏற்றுக்கொண்டு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு மீண்டும் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றினால் அதை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு.

ஆளுநர் ஆர். என் ரவி
ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை, என்று கட்டமாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது நீட் விலக்கு மசோதா பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video

நீட் விலக்கு மசோதா
முன்னதாக நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர். என் ரவி, இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது. அதிலும் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது,. அதனால் இந்த மசோதாவை திருப்பி அனுப்புகிறேன். அதேபோல் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது, என்று குறிப்பிட்டு இருந்தார். இதைத்தான் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டில் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications