பிராந்திய மொழிகளில் அரசு தேர்வு.. கர்நாடகாவில் இருந்து எழுந்த கோரிக்கை! உடனே குரல் கொடுத்த கனிமொழி
சென்னை: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் மொத்தம் 20,000 காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

பணியாளர் தேர்வாணையம்
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற விரும்புவோர், இந்த பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு என தனியாகவே தயாராவார்கள். இப்போது 20,000 பணிக்காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ள நிலையில், பலரும் இதில் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும், இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

பிராந்திய மொழிகள்
க்ரூப் பி மற்றும் க்ரூப் சி பிரிவு பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்த தேர்வு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் எதிலும் நடத்தப்படாது. எனவே, மாநில மொழிகளில் கல்வி பயின்றவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது. இதனிடையே மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பும் முக்கிய தேர்வான இதைப் பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கோரிக்கை
கர்நாடகாவைச் சேர்ந்த அருண் ஜவ்கல் என்பவர் இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்து உள்ளார். முன்பு மண்டல அளவில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு இப்போது நாடு முழுக்க ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அருண் ஜவ்கல், அறிவில் சிறந்து விளங்கும் பல மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படித்திருப்பார்கள் என்றும் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தேர்வு நடத்தினால் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அருண் ஜவ்கல் தெரிவித்து உள்ளார்.

வலியுறுத்தல்
மேலும், இது குறித்து அருண் ஜவ்கல் தனது ட்விட்டரிலும் கோரிக்கை விடுத்து உள்ளார். தமிழக முதல்வர் மற்றும் திமுக எம்பி கனிமொழியை டேக் செய்து அவர், "மத்திய அரசுத் துறைகளில் 20 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வுகள் இந்தி/ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும். இந்தி அல்லாத இந்திய மொழிகளிலும் தேர்வுகளை நடத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஜனநாயகப் படுகொலை
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி, "பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" என்று அவர் ட்வீட் செய்து உள்ளார்.

ஐபிபிஎஸ் தேர்வு
முன்னதாக கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) தேர்வு குறித்தும் இதுபோன்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பிற்குத் தென் மாநிலங்களில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் சேர்த்து 13 பிராந்திய மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து இருந்தது. அதேபோல எஸ்எஸ்சி தேர்வும் பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications