ஒத்திவைக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா.. நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு!
சென்னை: திமுக முப்பெரும் விழா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் திமுக சார்பில் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். தற்போது மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீரடைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 15 ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வரும் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவின் போது, பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது, முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்
பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
கலைஞர் விருது - துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
பாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
பேராசிரியர் விருது - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா
முரசொலி செல்வம் விருது (முரசொலி அறக்கட்டளை சார்பில்) - ப.திருமாவேலன் (ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர்)


Click it and Unblock the Notifications
