விருதுநகரில் திமுக முப்பெரும் விழா - டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது!
சென்னை: விருதுநகரில் வரும் 15-ம் தேதி தி.மு.க.-வின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின்போது வழங்கப்படவுள்ள விருதுகள் குறித்தும், விருதாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

தி.மு.க. வின் முப்பெரும் விழா
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டாடப்படும் திமுகவின் முப்பெரும் விழா, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரால் முன்னெடுக்கப்பட்டது.

தலைவர்கள் பெயரில் விருதுகள்
திமுகவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருக்கும் இதில், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான அன்பழகன மறைவுக்குப் பின், அவரது பெயரில் பேராசிரியர் விருதும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில், கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா
அதன்படி, இந்த அண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா, விருதுநகரில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. விருதுநகரில் புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட தொடக்க விழா மற்றும் பட்டம் புதூா் பகுதியில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, விருதுகளை வழங்க உள்ளார். அதன்படி, இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

முப்பெரும் விழா விருதுகள் 2022
பெரியார் விருது - சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது - கோவை இரா. மோகனுக்கும், கலைஞர் விருது - திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பிக்கும், பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications