இன்று அமைச்சராக பொறுப்பேற்காத விசிக + ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள்.. ஏன் தெரியுமா? காரணம் இதுதான்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தவெகவின் 21 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை விஜய் ஒதுக்கியிருந்தால் இருகட்சிகளின் எம்எல்ஏகள் இன்று பதவியேற்கவில்லை. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியானது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறிய நிலையில் பிற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கட்சிகள் கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவளிப்பது என்பது விஜய்க்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இந்நிலையில் தான் விஜய் தனக்கு ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து அமைச்சரவையில் இணைத்து கொள்ள முடிவெடுத்தார்.
இதனால் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்திலேயே விஜய்யின் விருப்பத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மதுரை மேலூர் எம்எல்ஏ விஸ்வநாத் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதேபோல் விசிக மற்றும் இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை விஜய் ஒதுக்கீடு செய்தார். இதனை இருகட்சிகளும் ஏற்றுக்கொண்டு இருந்தாலும் கூட இன்று அமைச்சராக பதவியேற்கவில்லை. விசிகவை எடுத்து கொண்டால் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். திண்டிவனம் தொகுதியில் வென்ற வன்னியரசு, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் வன்னியரசுக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை எடுத்து கொண்டால் வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷா வெற்றி பெற்றுள்ளார். பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் வென்றுள்ளார். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஷாஜகான் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது விசிகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள். விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் தான் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். அதோடு தொடர்ந்து திமுக கூட்டணியில் தொடர்வதாக கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தான் விஜய் அவர்களை அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் அமைச்சரவையில் பங்கேற்றால் அது தவெக கூட்டணியில் இடம்பெற்றதாக ஆகிவிடும். இதனால் அவர்கள் தயக்கம் காட்டினர். மேலும் இதுதொடர்பாக விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டு முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளன. இதனால் தான் இருகட்சியின் எம்எல்ஏக்களும் இன்றைய அமைச்சராக பதவியேற்கவில்லை. விரைவில் விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலா ஒரு எம்எல்ஏக்கள் அமைச்சராக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications