பஸ்சில் தங்க சங்கிலி திருடிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சென்னையில் கைவரிசை.. அண்ணாமலை அட்டாக்
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 சவரன் தங்க சங்கிலியை திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி திருடினார். திமுகவை சேர்ந்த இவரை சென்னை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பது முதல் மாநில கருவூலத்தை சூறையாடுவது வரை திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவருக்கு வயது 50. இவர் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவுக்கு பஸ்சில் சென்றார். வரவேற்பு விழாவை முடித்த பிறகு வரலட்சுமி மீண்டும் பஸ்சில் வீடு திரும்பினார்.

வீடு திரும்பியபோது வரலட்சுமி தனது தங்க நகைகளை சரிபார்த்தார். அப்பாது 4 சவரன் எடை கொண்ட தங்க சங்கிலி மிஸ்ஸாகி இருந்தது. இதுதொடர்பாக அவர் கோயம்பேடு போலீசில் புகார் செய்தார்.
கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் பயணித்த பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் அவரது தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு பெண் ஒருவரை கைது செய்தனர்.
அந்த பெண்ணின் பெயர் பாரதி. வயது 56. இவர் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பது தெரியவந்தது. அதோடு அவர் திமுகவில் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து கொண்டு அவர் பஸ்சில் பெண்ணிடம் கைவரிசை காட்டியது அனைவரையும் திடுக்கிட வைத்தது.
இந்நிலையில் தான் பெண்ணிடம் தங்க சங்கிலி திருடிய திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி பாரதி விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பக்கத்தில் கூறியள்ளதாவது:
‛‛நீங்கள் திமுகவின் உறுப்பினராக இருந்தால் கொள்ளையடிப்பதற்கான உரிமத்துடன் அதற்கான பாராட்டையும் பெறுவீர்கள். இந்த போட்டோவில் வட்டமிட்டு காட்டப்பட்டு இருக்கும் நபர் திருப்பத்தூர் மாவட்ட திமுக ஊராட்சி தலைவர். பஸ்சில் 4 சவரன் தங்க சங்கிலியை திருடி உள்ளார். பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பது முதல் மாநில கருவூலத்தை சூறையாடுவது வரை திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications