அமலாக்கத்துறையை ‘மிஸ்யூஸ்’ செய்யும் பாஜக அரசு.. திமுக மா.செக்கள் கூட்டத்தில் குரல்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக அரசு பயன்படுத்துவதாக திமுக கண்டித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

DMK Passes Resolution Condemning BJP for Misusing ED Against Opposition

திமுக மா.செக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் : 1

திராவிட மாடல் அரசின் ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் - மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற - இந்தியாவிற்கே ரோல் மாடலாகச் செயல்படும் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு.

இந்தியத் துணைக் கண்டத்தில் - மக்கள் நலன் போற்றும் வகையில், மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் தீரத்துடன், சமூகநீதியைப் பாதுகாத்து, சட்டமன்ற மாண்பினை நிலைநாட்டி, ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் அரசாகவும், ஒன்றிய பா.ஜ.க அரசின் எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து - அரசியல்சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியலைப் பாதுகாக்கும் முதன்மையான மாநில அரசாகவும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து - ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் - மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற முதலமைச்சராகவும் - இந்தியாவிற்கே ரோல் மாடலாக - தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராகவும் திகழும் கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி - சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் - ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி - தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஆளுநரின் கையெழுத்தின்றி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, ஆளுநர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கி சகாப்தம் படைத்து, "சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே" - "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே - நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

அதோடு, வரலாற்றில் மீண்டும் மாநில சுயாட்சிக்காக மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்துள்ள கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் உவகையுடனும் - பெருமை பொங்கவும் பாராட்டுதலைப் பதிவு செய்து கொள்கிறது.

மேலும், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் அவர்களுக்குத் துணையாகச் செயலாற்றி வரும் துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வாழ்த்தும் - பாராட்டும் - நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 2

"நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு!" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின், நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவரது உள்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் தெரிவித்தபடி, வளர்ச்சி சார்ந்த எந்த ஓர் இலக்காக இருந்தாலும் அதில் இந்திய ஒன்றியத்தின் சராசரியைவிட தமிழ்நாடு கூடுதலான அளவில் முன்னேறியிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடு என்றால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடு; தேசிய சராசரியான 2.06 லட்சம் என்பதைவிட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம் என 1.74 மடங்கு அதிகரிப்பு;

தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 47 விழுக்காடு; நிலையான வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடம்; சமூக முன்னேற்றக் குறியீட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்; வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் வெறும் 1.43விழுக்காடாகக் குறைவு; மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.25 கோடி மக்கள் பயன்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு மருத்துமனைகளில் அதிகமான படுக்கைகள்;

இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்; 5.35 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றதில் நாட்டிலேயே இரண்டாவது இடம்; ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டிலேயே மூன்றாவது இடம்; சூரிய சக்தியில் நான்காவது இடம், ஸ்டார்ட்-அப் தரவரிசைப் பட்டியலில் அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-இல் முதலிடம், ஏற்றுமதித் தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம்;

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; நாட்டிலேயே காவல்துறையில் அதிக பெண் அதிகாரிகள் பணிபுரியும் மாநிலம்; அதுமட்டுமல்ல - சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று திராவிட மாடல் அரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது!

அதுமட்டுமல்ல, மக்களை முன்னேற்றும் முத்திரைத் திட்டங்களான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'மகளிர் விடியல் பயணத் திட்டம்', 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்', 'தமிழ் புதல்வன் திட்டம்', 'நான் முதல்வன் திட்டம்', 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்', 'இல்லம் தேடிக் கல்வி', 'மக்களைத் தேடி மருத்துவம்' என அனைத்துத் திட்டங்களும் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் - தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் முன்னோடியாகத் திகழ்வதை மற்ற மாநிலங்கள்கூட இன்று திரும்பிப் பார்க்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழக அரசின் இந்தச் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் - 224 பகுதிகள் - 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் : 3

பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு - கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் கூடல் மாநகரில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது!

நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில், 75 ஆண்டுகளைக் கடந்து தமிழ் மக்களுக்கான சமுதாய - அரசியல் பணிகளைச் சளைக்காமல் மேற்கொண்டு, நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தேசிய சக்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் நின்று தமிழ்நாட்டின் நலன் காத்து வருவதுடன் - இன்று அகில இந்திய அரசியலில் நம் கழகத் தலைவரின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஓங்கி நிற்கிறது.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் நம் ஒப்பற்ற கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, வருகின்ற

ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 4

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலுக்குக் கண்டனம்!
மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க எதிர்கொள்ளும்!

நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு - அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு - தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் மத்திய பாஜக அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அ.தி.மு.க போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க மத்திய பா.ஜ.க அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை "பழிவாங்கும் நடவடிக்கை" எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர்நீதிமன்றமும், மாண்பமை உச்சநீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்துவதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஏற்கெனவே கழகத் தலைவர் - முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னபடி, அமித்ஷா அல்ல; எந்த ஷா வந்தாலும் - அவர்கள் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் - மக்கள் மன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இரங்கல் தீர்மானங்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+