"கட்டுப்பாடு அவசியம்".. சர்வே டீம் தந்த லிஸ்ட்.. உதயநிதிக்காக திமுக களமிறக்க போகும் இளம் படை!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக பல இளம் முகங்களை களமிறக்க போவதாக தகவல்கள் வருகின்றன. திமுகவின் இந்த திட்டத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தயாராகி வருகிறது. முக்கியமாக எம்எல்ஏ உதயநிதி கொங்கில் நடத்திய முகவர்கள் மாநாட்டிற்கு பின் திமுக நிர்வாகிகள் படு தீவிரமாக களத்தில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகின்றனர் திமுக மாவட்ட செயலாளர்கள்.

திமுக சர்வே டீம்
ஏற்கனவே தகுதியுள்ளவர்கள் என ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேர் கொண்ட பட்டியலை திமுகவின் சர்வே டீம் கட்சி தலைமையிடம் ஒப்படைத்திருக்கிறது. பல கட்ட சோதனைக்கு பின், மக்கள் ஆதரவு, தகுதி என்று பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே டீமில் ஐபேக் முன்னாள் நிர்வாகிகள் இருந்ததாகவும் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

திமுக தேர்தல்
இந்த முறை திமுகவின் வேட்பாளர்களில் 80 சதவீதம் புதிய முகம், இளம் வயது, கல்லூரி படிப்பு முடித்தவர், திராவிட அரசியலில் போதிய அறிவாற்றல் ஆகியவைகளை கணித்தே வாய்ப்பு வழங்க வேண்டும் என மா.செ.க்களுக்கு தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாராம். இளம் தலைவர்களை கண்டுபிடிக்க வேண்டும். புதிய ரத்தங்களை நகராட்சி அளவில் பாய்ச்ச வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.

வேட்பாளர் தேர்வு
அதற்கேற்ப வேட்பாளர் பட்டியலில் புதிய இளம் முகங்களுக்கும், படித்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு பின் வேறு சில காரணங்களும் இருப்பதாக திமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. உதயநிதியின் அரசியலுக்கு புதிய இளம் முகங்கள்தான் ஒத்துழைப்பாக இருக்கும் என்பதாலேயே இந்த அளவுகோலில் வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி வரும் காலத்தில் திமுகவில் முக்கிய பொறுப்பிற்கு வந்தால் இளம் தலைவர்கள் அவருக்கு கீழ் வேலை பார்க்க வசதியாக இருக்கும் என்றும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம். அதாவது வெற்றிப்பெறுபவர்கள் உதயநிதியின் கண்காணிப்பில் இருக்கவும், உதயநிதியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதாலும் இந்த அளவுகோல்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன, என்று தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications