போதிய பெரும்பான்மை இல்லை.. வாபஸ் பெறப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா.. அடித்து தூக்கிய திமுக!
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, போதிய பெரும்பான்மை இல்லாததால் லோக்சபாவில் தோல்வியடைந்தது. இதையடுத்து தொகுதி மறுவரையறை மசோதா வாபஸ் பெறப்பட்டது. திமுக எம்பிக்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில்.. தற்போது மசோதா வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு மூன்று முக்கிய மசோதாக்களை நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை:

131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2026: இதுதான் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையிலும் மற்றும் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட 'மாஸ்டர் பிளான்' மசோதா!
தொகுதி மறுவரையறை மசோதா, 2026 (Delimitation Bill): தொகுதிகளைப் பிரிப்பதற்கான புதிய ஆணையத்தை உருவாக்குவது. தற்போது 543 ஆக இருக்கும் மக்களவை (Lok Sabha) இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதன் மூலம், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுத்தாலும், தற்போது இருக்கும் ஆண் எம்பிக்களின் வாய்ப்புகள் குறையாது என அரசு வாதிட்டது.
அதாவது, பெண்களுக்கு 33% இடங்கள் போக, மீதமுள்ள 67% இடங்களே தற்போதைய 543 இடங்களை விட அதிகமாக இருக்கும். இதனால் ஆண் எம்பிக்களுக்கு சிக்கல் இல்லை. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை (நாரி சக்தி வந்தன் அதினியம்) நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதே இந்தச் சட்ட மசோதாவின் முதன்மையான நோக்கமாகும். கடந்த 2023-ஆம் ஆண்டே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர 2034-ஆம் ஆண்டு வரை ஆகலாம் என்ற சூழல் நிலவியது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பே, மத்திய அரசு அவசரமாக நேற்று இந்த மசோதாவை அறிமுகம் செய்தது.
சூடுபிடித்து டெல்லி களம்
கடந்த இரண்டு நாட்களாக டெல்லி அரசியல் களம் இந்த மசோதாக்களை சுற்றியே சுழன்றது. நேற்று, வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி வரை நீடித்த விவாதங்கள், வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தன. இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு (Two-thirds majority) ஆதரவு தேவை. அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற வேண்டுமானால், அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.
மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில், குறைந்தது 361 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும்.
ஆனால், வாக்கெடுப்பின் போது:
ஆதரவாக விழுந்த வாக்குகள்: 298
எதிராக விழுந்த வாக்குகள்: 230
தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதோடு பிணைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு முக்கிய மசோதாக்களை அரசு கைவிட்டது.
திமுக எதிர்ப்பு
திமுக எம்பிக்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில்.. தற்போது மசோதா வாபஸ் பெறப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் இருந்தே நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை திமுக கடுமையாக எதிர்த்தது. சொல்லப்போனால் திமுகவின் எதிர்ப்பே நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீயை பற்ற வைத்தது. நேற்று நாடாளுமன்றத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி ஆ ராசா இதை எதிர்த்து மிக கடுமையாக பேசினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையும் அவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
நேற்று ஆ. ராசா பேசுகையில், 1971 பாகிஸ்தான் போரின் போதும், 1999 கார்கில் போரின் போதும், கோடிக் கணக்கில் நிதி அளித்த கட்சி திமுக. தேசியவாதம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. மாநில சுய ஆட்சியை மதிக்காமலும், ஹிந்தி-சமஸ்கிருதத்தை எப்போதெல்லாம் திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம் என்று திமுக எம்.பி. ஆ.ராசா காட்டமான பதிலடி கொடுத்தார். இதையடுத்து இன்று எம்பி கனிமொழி தொடங்கி பல திமுக எம்பிக்கள் கடுமையாக இதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று கருப்பு கொடி போராட்டம், மசோதாவை தீயிட்டு கொளுத்தி போராட்டம் என்று கடுமையாக போராட்டம் செய்தார். இந்த நிலையில்தான் இன்று 3 மசோதாக்களும் தோல்வி அடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications