“சைலண்ட்” அண்ணாமலை.. கலவரத்தை தூண்டும் பாஜக! பீகாரிகள் மீது தாக்குதலா? திமுக ராஜீவ் காந்தி பரபர
வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை என்று பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்து இருந்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் மாநிலம் முழுவதும் அவதூறு பரப்பும் பாஜகவை பற்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வாய்திறக்க மறுப்பதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு கலவரம் செய்ய தூண்டுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வட இந்தியர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. கட்டிடத் தொழில், உணவகங்கள், சலூன் கடைகள், நெசவு தொழில் தொடங்கி விவசாயம் வரை பல்வேறு தொழில்களை வட இந்தியர்கள் செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்கள் என சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் வட இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.

வட மாநிலத்தவர்கள் வருகை
வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதுடன், தொழிலாளர் நலனும் பாதுகாக்கப்படுவதாக கூறி பலர் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருவதை விரும்புகிறார்கள். இவர்களின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்றும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

போராட்டம்
இதனை கண்டித்து கடந்த மாதம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கட்டுமான பணிகளில் வட மாநிலத்தவர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதால் தங்களுக்கு வேலை கிடைக்காமல் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உரிமையாளரை கொன்ற பீகாரிகள்
இதை கடந்து வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் சேலத்தில் ரூ.4 லட்சம் பணத்துக்காக பீகாரை சேர்ந்த தொழிலாளர்களே உரிமையாளரை கத்தியால் பல இடங்களில் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை
அதேபோல் சமீபத்தில் அரியானாவை சேர்ந்த கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் கோவை தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் அங்குள்ள கேண்டீனில் பணிபுரிந்த வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

பீகாரில் பரவும் வதந்தி
இப்படி பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து வந்தாலும் பிழைப்பு தேடி வரும் ஒட்டுமொத்த வட இந்திய தொழிலாளர்களும் இப்படிப்பட்டவர்கள் என்று அவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதை ஏற்க முடியாது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக கூறி பீகாரில் போலியான வீடியோக்களை பகிர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்திலும் இது பகிரப்பட்டது.

டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு
இதனை பீகார் ஊடகங்கள், ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அந்த செய்திக்கு ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை என்று இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

ராஜீவ் காந்தி விமர்சனம்
இந்த நிலையில் திமுக மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "நம் ஊரில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் மாநிலம் முழுவதும் பீகார் பாஜக அவதூறு பரப்பி வருகிறது! தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் பீகார் பாஜகவை பற்றி வாய் திறக்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை யோசிக்கிறார். திட்டமிட்டு பாஜக கலவரம் செய்ய தூண்டுகிறது!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications