கோவிலை இடித்ததாக டிஆர் பாலுவின் கட் & பேஸ்ட் வீடியோ.. அண்ணாமலைக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!
அண்ணாமலை மலிவு அரசியல் செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
சென்னை: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டிஆர் பாலு பேசிய வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து வெளியிட்ட அண்ணாமலைக்கு திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மலிவான அரசியல் செய்வதாக குறிப்பிட்ட டிகேஎஸ் இளங்கோவன், அவர் கட் அண்ட் பேஸ்ட் மையத்தை தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே திமுக vs பாஜக இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இரு நாட்களுக்கு முன் 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அண்ணாமலை வெளியிட்ட வீடியோ
அந்த வீடியோவில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டிஆர் பாலு பேசி இருந்தார். அதில் அவர், 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்திருக்கிறேன். எங்கள் ஊரில், என் தொகுதியில் உள்ள சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இருந்தது. அதனை இடித்திருக்கிறேன். எனக்கு ஓட்டு வராதென தெரியும். ஆனால் ஓட்டு வாங்குவது எப்படியென எனக்கு தெரியும் என்று பேசி இருந்தார்.

அண்ணாமலை விமர்சனம்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 100 கோவில்களை இடித்ததாக திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்த காரணத்திற்காக தான் இந்துசமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

டிஆர் பாலு வீடியோ
ஆனால் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ வெட்டி, ஒட்டப்பட்டது என்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் டிஆர் பாலு பேசிய முழுமையான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 ஆண்டுகள் பழமையான கோவில், மசூதி, மாதா கோவிலை இடித்து இருக்கேன்.

3 கோயில்கள் இடித்தேன்
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இது சரியான முடிவா எனக் கேட்டார். அதற்கு நான், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், பார்வதி கோவில் இருந்தது.

புதிய கோயில்கள்
அந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஓட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஓட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. இடிக்கப்பட்ட கோயில்களுக்கு பதிலாக அருகில் மண்டபத்துடன் புதிய கோவில் கட்டி கொடுத்தேன் என்று பேசி இருக்கிறார்.

திமுக கண்டனம்
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். டிஆர் பாலு பேசிய முழு வீடியோவை கட் & பேஸ்ட் செய்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வெட்டி ஒட்டி வீடியோ வெளியிடுவதற்கு பதில் கட் & பேஸ்ட் மையத்தை அண்ணாமலை தொடங்கலாம் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications