62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்?
சென்னை: தமிழகத் தேர்தல் களம் உச்சக்கட்ட பிஸியில் உள்ளது. வெறும் மேடைப் பேச்சுகளும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் மட்டுமே வெற்றியைத் தேடித்தந்துவிடாது என்பதைத் தி.மு.க தலைமை மிக ஆழமாக உணர்ந்துள்ளது. இதன் விளைவாகத்தான், தமிழகத்தின் 234 தொகுதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஒவ்வொன்றையும் ஒரு தனித்துவமான போர்க்களமாக மாற்றி வருகிறதாம் அறிவாலயம்.
திமுகவின் தேர்தல் பணிகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. எனினம் தற்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால், அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சிறிய மற்றும் இதர கட்சிகள் போட்டியிடும் அந்த 62 தொகுதிகள் தான். இந்தத் தொகுதிகளைக் குறிவைத்துத் தி.மு.க ஏவியுள்ள "இரட்டை ரகசியக் குழுக்கள்" அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அறிவாலயத்தின் மெகா ஆபரேஷன்
அறிவாலயத்தின் இந்த ரகசியப் படையில் "பென்" (PEN) மற்றும் "ஐ-பேக்" (I-PAC) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்களாம்.. இவர்கள் சாதாரணத் தொண்டர்களைப் போலவோ அல்லது கட்சிப் பொறுப்பாளர்களாகவோ இல்லாமல், முற்றிலும் கள ஆய்வாளர்களாகவே செயல்பட்டு வருவதுதான், மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சாதி ரீதியான வாக்கு வங்கி, கடந்த காலத் தேர்தல் முடிவுகள், தற்போதைய வேட்பாளர் மீதான மக்களின் அதிருப்தி என்றெல்லாம் அணு அணுவாகத் தகவல்களைச் சேகரித்துத் தலைமைக்கு அனுப்பி வருகின்றன.. அதிலும் அதிமுகவின் தொகுதிப் பங்கீடு குளறுபடிகளால் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கும் இடங்களை இவர்கள் கண்டறிந்து, அங்குத் தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்யும் காய்நகர்த்தல்களைச் செய்து வருகின்றனர்.
பாஜக 22 தொகுதிகள்
பாஜக போட்டியிடும் 22 தொகுதிகள் மற்றும் பா.ம.க களம் காணும் 14 தொகுதிகள் என மொத்தம் 36 தொகுதிகளை திமுக ஏற்கனவே தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திருவண்ணாமலை, திருச்செந்தூர், ஆவடி போன்ற பா.ஜ.க-வின் முக்கிய இடங்களிலும், சேலம் மேற்கு மற்றும் விக்கிரவாண்டி போன்ற பாமகவின் கோட்டைகளிலும் திமுகவின் வியூகம் மிகக் கச்சிதமாகச் செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்குள் புகைந்து கொண்டிருக்கும் உட்கட்சிப் பூசல் மற்றும் பா.ம.க-வில் அன்புமணி - ராமதாஸ் தரப்பினரிடையே நிலவும் சில கருத்து வேறுபாடுகளை திமுக மிக சரியாக தனக்கு சாதகமாகத் திருப்பியுள்ளதாகவே தெரிகிறது.. இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஒரு உளவியல் வெற்றியை அறிவாலயம் பெற்றுவிட்டது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
அதிமுக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் தி.மு.க-வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. அமமுகவின் வாக்குகளை சசிகலா தரப்பு கபளீகரம் செய்வதும், ஓபிஎஸ் தரப்பின் ஆதரவு நிலைப்பாடும் அ.தி.மு.க-வைச் சிதறடித்துள்ளது.. "எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களைத் தலையில் கட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி" என்று கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாகவே புலம்பத் தொடங்கி விட்டதாம்.
சர்ஜிக்கல் திமுக
எனவே, ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தில் பாதியை, அ.தி.மு.க கூட்டணியின் இந்தத் தவறான கணக்குகளாலேயே அறுவடை செய்துவிடலாம் என்று அறிவாலயம் குஷியாக உள்ளது.
இந்த 62 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும், நிதி ஆதாரங்களையும் தலைமை தாராளமாக வாரி வழங்கி வருகிறதாம்..
சாதாரணத் தொண்டர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவருமே இந்தக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் இந்த அதிரடி ஆட்டம் இன்னும் வேகம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், தேர்தல் தேதி வருவதற்கு முன்பே சரி பாதி கிணற்றை தாண்டிவிட்ட உற்சாகத்தில் இருக்கிறதாம் அறிவாலயம்....!!!












Click it and Unblock the Notifications