என் சம்பந்தி பேசும் போது எல்லோரும் கை தட்டுங்க! இல்லைன்னா சொந்தம் கெட்டுவிடும்! டிஆர்.பாலு கலகலப்பு!
சென்னை: கருணாநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ''என் சம்பந்தி பேசும் போது எல்லோரும் கை தட்டுங்க'' எனக் கூறி அங்கிருந்தவர்களை கலகலப்பாக்கினார்.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நடத்திய இலக்கிய அரங்கத்தை தொடங்கி வைத்து பேசும் போது அவர் இதனைக் கூறினார்.
அது தொடர்பான விவரம் வருமாறு;

அமைச்சர் மா.சுப்ரமணியன்
தென்சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன் ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா இலக்கிய அரங்கம் நடைபெற்றது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நடுவராக பங்கேற்ற அந்த இலக்கிய அரங்கத்தில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் சாரதா நம்பி ஆரூரனும் பேச்சாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். இதனிடையே இந்த இலக்கிய அரங்கத்தை கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்துப் பேசினார்.

சாரதா நம்பி ஆரூரன்
அப்போது மேடையில் அமர்ந்திருந்த சாரதா நம்பி ஆரூரன் தனது சம்பந்தி என்ற தகவலை கட்சியினர் மத்தியில் பகிர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர் சிரித்துக்கொண்டே, ''என் சம்பந்தி பேசும் போது எல்லோரும் கை தட்டுங்க, அவங்க என்ன பேசுனாலும் கைதட்டுங்க, ஆனால் என்ன பேசப்போறாங்கன்னு எனக்கும் தெரியாது, நீங்க கை தட்டலைன்னா சொந்தம் கெட்டுடும்'' என மேடைக்கு கீழ் அமர்ந்திருந்தவர்களை பார்த்து கூறினார்.

கலாய்த்த பாலு
நகைச்சுவையாக இவ்வாறு கூறி தனது சம்பந்தி டி.ஆர்.பாலு தன்னை கலாய்த்ததால், பட்டிமன்றம் மற்றும் கவியரங்க பேச்சாளர் சாரதா நம்பி ஆருரன் விழுந்து விழுந்து சிரித்தார். கருணாநிதியுடன் நெடுங்காலம் பயணித்தவர்களில் டி.ஆர்.பாலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவரும் அவ்வப்போது நகைச்சுவை நயத்துடன் பேசி தன்னை சுற்றியுள்ளவர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

சம்பந்தி சம்பந்தி
இதனிடையே ஆன்மிகவாதிகள் பற்றி பேசிக்கொண்டிருந்த டி.ஆர்.பாலு அப்படியே மேடையில் அமர்ந்திருந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் கவியரங்க பேச்சாளர்கள் பக்கம் தனது பார்வையை திருப்பினார். அப்போது தனது சம்பந்தி சாரதா நம்பி ஆழ்ந்த யோசனையில் இருந்ததை கண்டு பேச்சை ஒரு நொடி நிறுத்திய பாலு, ''சம்பந்தி சம்பந்தி என்ன தியானமா செய்றீங்க'' என மீண்டும் பொதுவெளியில் கலாய்த்தார். இதனால் மீண்டும் அந்த இடம் கலகலப்பாகியது.












Click it and Unblock the Notifications