உரிய நேரத்தில் வரும்.. உதயநிதி அப்படி சொன்னதும்.. சட்டென கேட்ட சத்தம்.. ரூட்டை மாற்றிய திமுக
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ மனதில் வைத்து இளைஞரணி பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். தேர்தலை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி சார்பாக கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்சென்னை திமுக சார்பில், திமுகவின் இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர்கள் அணி உள்ளிட்ட 23 சார்பு அணிகளின் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், 15-ந்தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இதில், 2,700 பேர் கலந்து கொண்டனர். அமைச்சரும், தென் சென்னை மா.செ.வுமான மா.சுப்பிரமணியனின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். பொறுப்பில் உள்ள அனைவருக்கும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, தேர்தல் களப் பணிகளில் கடுமையாக உழைப்பது, முதல்வர் நிர்ணயித்திருக்கும் 200 இடங்களில் வெற்றி எனும் இலக்கை அடைவது குறித்து விரிவாகப் பேசினார்.
தேர்தல் பணிகளில் எப்படி நாம் முதல் கட்சியாக இருக்கிறோமோ, அதே போல தேர்தல் நாளன்று வாக்குப்பதிவிலும் நாம் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், "கழகத்தில் கடுமையாக உழைப்பவர்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் தலைவர் கொடுப்பார்" என்றும் உதயநிதி சொல்ல, ஏக கைத்தட்டல். சார்பு அணிகளின் பொறுப்பாளர்களின் முதல் அறிமுகக்கூட்டம் தென்சென்னையில் நடந்திருக்கிறது. தேர்தலை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிளான்:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் திமுக இப்போதே தேர்தலுக்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டதாம். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த ராபின் சர்மாவின் Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.
இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். இந்த ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக கிளீன் ஸ்வீப் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக படுதோல்வி அடையும் என்றும் ரிப்போர்ட் திமுகவிடம் தெரிவிக்கின்றன என்று கூறப்படுகிறது. இதை மனதில் வைத்தே ஸ்டாலின் 200+ மிஷன் என்பதை அறிமுகப்படுத்தி உள்ளாராம். இதை எல்லாம் மனதில் வைத்தே இளைஞரணி பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
தேர்தலை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி சார்பாக கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications