இனி விஜய் Vs உதயநிதி ஸ்டாலின்.. தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் உதயநிதி! திமுக அறிவிப்பு
சென்னை: திமுக சட்டமன்ற குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற குழு துணைத் தலைவராக கே.என் நேரு, கொறடாவாக எ.வ வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இதனால் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கு சென்றது. அதே நேரம் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். தவெக வேட்பாளர் விஎஸ் பாபு ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர்
இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற திமுகவில் யார் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. முதலில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், துணைத் தலைவராக திரு. கே.என்.நேரு அவர்களும், கொறடாவாக திரு. எ.வ.வேலு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக விஜய் இன்று காலையில் பதவியேற்றுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் தமிழக எதிர்க்கட்சி தலைவராக ஆக உள்ளார்.
நாளை எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
தமிழகத்தில் 17 வது சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
இதையடுத்து காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்ததாலும், திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில் ஆளுநர் அர்லேகர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்தார். அதன்படி இன்று விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். நாளை தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர்.
தவெக சார்பில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையாவை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 13 ஆம் தேதிக்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் கூறியுள்ளதால், திமுகவும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அறிவித்து இருக்கிறது.














Click it and Unblock the Notifications