திமுக எம்எல்ஏ தொகுதிக்கே வரல! விஜய் தொகுதியில்.. உதயநிதியை பார்த்து சொன்ன இளைஞர்! அடுத்து வந்த பதில்
சென்னை: பெரம்பூர் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கையில், அண்ணன் ஆர்டி சேகர்.. வீட்டில் இருக்க மாட்டார். அவர் எப்போதும் தொகுதியில் இருப்பவர்.. அடிக்கடி இங்கே வருவார். உங்கள் வீடுகளில்தான் இருப்பார். எப்போதும் மக்களுடன் இருப்பார் என்று கூறினார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர்.. அவர் தொகுதியை 5 வருடமாக எட்டி பார்க்கவே இல்லை என்றார். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்.. சும்மா பேசாத.. அப்படி எல்லாம் இல்லையே.. நானே இங்கே பல டைம் வந்து இருக்கேன் .. சொல்லணும்னு சொல்றியா என்று கேட்டார். உடனே அந்த இளைஞர் அப்படியே அமைதியாகிவிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாக சென்னை பெரம்பூர் மாறியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் மற்றும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பெரம்பூர்: திமுகவின் கோட்டையா?
வட சென்னையின் மிக முக்கியமான தொகுதியான பெரம்பூர், நீண்டகாலமாக இடதுசாரிகள் மற்றும் திமுகவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாகும். 1989 முதல் நடந்த தேர்தல்களில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான சிபிஎம் ஆகியவை தலா மூன்று முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன.
குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை விட சுமார் 55,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, இத்தொகுதி திமுகவின் இரும்புக்கோட்டை என்பதை அவர் நிரூபித்தார். இம்முறை மீண்டும் தனது கோட்டையைத் தக்கவைக்கக் களமிறங்கியுள்ளார் ஆர்.டி.சேகர்.
வாக்கு விவரங்கள் - ஒரு பார்வை (2021 தேர்தல் தரவுகள்):
திமுக (ஆர்.டி.சேகர்): 1,05,267 வாக்குகள் (52.9%) பெற்று முதலிடம் பிடித்தார்.
அதிமுக (என்.ஆர்.தனபாலன்): 50,291 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
நாம் தமிழர் (மெர்லின் சுகந்தி): 19,821 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
வெற்றி வித்தியாசம்: திமுக வேட்பாளர் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
புதிய சவால்: நடிகர் விஜய் ஏன் பெரம்பூரைத் தேர்ந்தெடுத்தார்?
நடிகர் விஜய் தனது அரசியல் அறிமுகத்திற்காக பெரம்பூரைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல.
மக்கள்தொகை நெருக்கம்: சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இது (சுமார் 2.22 லட்சம் வாக்காளர்கள்).
வடசென்னை குறியீடு: எளிய மற்றும் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், தனது "தளபதி" இமேஜ் மற்றும் மக்கள் இயக்கப் பணிகள் கைக்கொடுக்கும் என விஜய் நம்புகிறார். கிறிஸ்துவர்கள் அதிகம் என்பதால் அது தனக்கு கைகொடுக்கும் என்று அவர் நினைக்கிறார்.
நேரடி மோதல்: திமுகவின் கோட்டையிலேயே அக்கட்சியை வீழ்த்தினால், அது தமிழகம் முழுவதும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான செய்தியைச் சொல்லும் என்பது விஜய்யின் கணக்கு.
வாக்கு வங்கி மற்றும் சிறுபான்மையினரின் பங்கு
பெரம்பூர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் சிறுபான்மையின வாக்குகளும், பட்டியல் சமூக மக்களின் வாக்குகளும் மிக முக்கியமானவை. இத்தொகுதியில் கணிசமான அளவில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர்.
சிறுபான்மையினர் சக்தி: பாரம்பரியமாக திமுகவின் பக்கம் இருக்கும் இந்த வாக்கு வங்கியில், விஜய்யின் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இளைஞர் வாக்குகள்: இத்தொகுதியில் புதிதாகச் சேர்ந்துள்ள சுமார் 24,000 இளம் வாக்காளர்கள் விஜய்யின் மிகப்பொரிய பலமாகக் கருதப்படுகின்றனர். சினிமாவைத் தாண்டி அரசியலில் அவர் முன்வைக்கும் திட்டங்கள் இவர்களை ஈர்க்குமா என்பதே எதிர்பார்ப்பு.
வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்
திமுகவின் கட்டமைப்பு: ஆர்.டி.சேகருக்குப் பின்னால் திமுகவின் வலுவான வார்டு மட்டத்திலான பூத் கமிட்டிகள் மற்றும் கடந்த 5 ஆண்டுகால தொகுதிப் பணிகள் உள்ளன.
விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து: விஜய்யின் ரசிகர் மன்றங்கள் (தவெக கிளைகள்) தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். "மாற்றம் வேண்டும்" என்று நினைக்கும் நடுநிலை வாக்காளர்களை விஜய் ஈர்க்க வாய்ப்புண்டு.
மக்களின் குறைகள்: போக்குவரத்து நெரிசல், மழைநீர் வடிகால் பிரச்சனைகள் மற்றும் குடிநீர் மாசு போன்ற நீண்டகாலப் புகார்கள் இத்தொகுதியில் உள்ளன. இவற்றை யார் சரிசெய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
தற்போது 2026-ல், திமுகவின் இந்த 52% வாக்கு வங்கியை உடைத்து, அதிமுக மற்றும் பிற கட்சிகளின் வாக்குகளையும் கவர்ந்து விஜய் வெற்றி பெறுவாரா? அல்லது திமுக தனது கோட்டையை மீண்டும் பாதுகாக்குமா? என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பு. பெரம்பூர் தொகுதி முடிவுகள் தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகாலப் போக்கை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications