அசராத ஸ்டாலின்.. விடாத எடப்பாடி பழனிசாமி.. திமுகவா? அதிமுகவா?.. உள்ளாட்சி தேர்தலில் நாளை ரிசல்ட்
நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது
சென்னை: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையானது, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்ட தேர்தலில், 77.43 சதவீதமும், 2ம் கட்ட தேர்தலில், 78.47 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 70.51 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்கள்
இதைதவிர, முறைகேடுகள் நடந்ததாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2 இடங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது.. 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற வாக்குப் பெட்டிகள், 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ்
அனைத்து மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ரூம்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தலாகும்.. திமுக ஆளும் கட்சியாக உள்ளதால், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக பிரச்சார களத்தில் செயல்பட்டது..

திமுக
இந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அதிமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டது.. அதுமட்டுமல்லாமல் திமுகவுக்கு இது கவுரவ பிரச்சனையாகவும் உள்ளது.. அதேபோல, அதிமுகம் இந்த தேர்தலை ஆரம்பத்தில் இருந்தே மும்முரமாக அணுகி வருகிறது.. கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்ததால், இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்ல களமிறங்கியது... எடப்பாடி பழனிசாமி செல்லுமிடமெல்லாம், மிகப்பெரிய எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி வந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் அதிமுக ஆளாகி உள்ளது.

திமுக
இதைதவிர, உட்கட்சி பிரச்சனைகள் தலைதூக்கினாலும், பலம்பொருந்திய திமுகவை சமாளிக்க கூடிய நிர்ப்பந்தத்திலும் உள்ளது.. எனவேதான், வேட்பாளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை இரு தரப்பில் இருந்தும் வாரி இறைக்கப்பட்டதாக செய்திகளும், அது தொடர்பான புகார்களும் வந்தன... மற்றொருபக்கம், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், 9 மாவட்டங்களிலும் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டனர்..

ஸ்டாலின்
9 மாவட்ட குழு தலைவர்கள், 74 ஒன்றிய தலைவர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் மொத்தமாக கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டது... ஆனால், இந்த தேர்தலின் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை... சட்டசபை தேர்தலை போல, உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று மட்டும் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், எடப்பாடி பழனிசாமி முழு வீச்சில் பிரச்சாரத்தில் இறங்கினார்.. திமுக மீது புகார்களை வீசி கொண்டே, அதிமுகவுக்கு ஓட்டு சேகரித்தார்.. இந்த பிரச்சாரமும் படு சுவாரஸ்யமாக இருந்தது.. திமுக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி சொன்னால், 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று திமுக தரப்பு பதிலடி தந்தது.

தேமுதிக
இதனால், திமுகவின், நீட் தேர்வு ரத்து வாக்குறுதி, கூட்டுறவு கடன் குளறுபடி போன்றவற்றை வைத்து அதிமுக வேறு ரூட்டில் பிரச்சாரத்தை கையில் எடுத்தது... அதேபோல, பாமகவும், அமமுகவும், தேமுதிகவும் இந்த முறை தனித்து போட்டியிட்டன.. வழக்கம்போல சீமான் இந்த முறையும் தனித்து களமிறங்கினார்.. இப்படி அனைத்து தரப்பிலுமே பிரச்சாரமும், வாக்குப்பதிவும் நடந்து முடிந்த நிலையில், பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

அதிமுக
இந்த 9 மாவட்டங்களில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது நாளை தெரிந்துவிடும். அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பொறுத்தே, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. அதற்கான வேலைகளையும் இப்போதே ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications