கூட்டணி ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரச்சனையில்லை.. ஸ்டாலின் கருத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி பதில்!
சென்னை: தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பிரச்சனை இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், பிற மாநிலங்களில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் போது தமிழகம் தயங்குவது ஏன் என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய், தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின் விஜய்யின் வார்த்தைகளை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. திமுகவுக்கு தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின் பேச்சு
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது.
காங்கிரஸ் கட்சிக்கு பதில்
அது எங்களுக்கும் தெரியும்.. அவர்களுக்கும் தெரியும்.. திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணியில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகின்றனர். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னுடைய சகோதரர் போன்றவர். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை என்று தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்திற்கான மறைமுக பதிலாக அமைந்துள்ளது.
பிரவீன் சக்ரவர்த்தி பதிவு
இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதில் பிரவீன் சக்ரவர்த்தி, இந்தியாவில் மற்ற மாநில மக்களை போல் தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைவதில் பிரச்சனை இருப்பதாக தமிழக மக்கள் கருதவில்லை.
ராகுல் காந்தியின் மவுனம்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்காது என்று கூறியுள்ளார். இதனால் திமுகவை மேலும் நெருக்க காங்கிரஸ் முடிவு எடுத்து செயல்படுவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆட்சியில் பங்கு தொடர்பாக ராகுல் காந்தியின் காதுகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டு சென்றுவிட்ட சூழலில், அவர் பொறுமை காப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications