தவெக இளைஞர்கள் நம்ம பசங்க.. தற்குறினு சொல்லாதீங்க.. சங்கிகள் கிடையாது.. திமுக எம்எல்ஏ எழிலன் அட்வைஸ்
சென்னை: தவெகவில் இருக்கும் இளைஞர்களை தற்குறி என்று விமர்சிக்க கூடாது என்றும், அவர்கள் சங்கிகள் இல்லை என்றும் திமுக எம்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். அவர்களுடன் திமுகவினர் உரையாட தொடங்க வேண்டும் என்று கூறிய எழிலன், தவெகவில் இருக்கும் இளைஞர்களும் நம்ம பசங்க தான் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று தெரிவித்து வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் திமுக மற்றும் தவெக இடையில் கடுமையான மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் காரணமாக திமுகவினர் தவெக தொண்டர்களை தற்குறி என்று விமர்சித்து வருகின்றனர். இது தவெக தொண்டர்கள் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் பெரும்பாலும் இளைஞர்களே இருக்கும் நிலையில், இளைய தலைமுறையினரை இப்படி விமர்சிக்கலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் திமுக தரப்பில் நடத்தப்பட்ட அறிவுத் திருவிழாவில் அக்கட்சி எம்எல்ஏ எழிலன் முக்கிய உரையாடல் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். அதில் எழிலன் பேசுகையில், தற்குறி, தற்குறி என்று பட்டியலின இளைஞர்களை, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை விமர்சித்து வருகிறோம். அதுவொரு தவறான அணுகுமுறை. நாம் அவர்களிடம் பேசவில்லை.
அவர்கள் நம்மோடு பேசாமல் செல்வது நமது தவறுதான். ஏனென்றால் அவர்களிடம் பள்ளிக்கூட ஆசிரியரோ, கல்லூரி ஆசிரியரோ பேசவில்லை. சமூகநீதி அரசியலை பேசவில்லை. நாம் பேசவில்லை.. ஏனென்றால் அவர்களின் மொழி நமக்கு தெரியவில்லை.. நாம் உரையாட தொடங்கினால், அவர்களை சமாதானம் செய்ய முடியும்.
தவெக தலைமை சுயநலமாக இருக்கிறார்கள்.. ஆனால் அந்தக் கட்சியில் உள்ள இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அந்த ரசிகர்கள் கூட்டத்துடன் உரையாடத் தொடங்க வேண்டும். அவர்களை விமர்சிக்கக் கூடாது.. தவெகவில் உள்ளவர்கள் சங்கிகள் கிடையாது. அவர்களுடன் பேச தொடங்க வேண்டும். திமுக பேச்சாளர்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது.
அவர்களுடன் Gen Z தலைமுறையினர் பேச வேண்டும். அவர்களுடன் பேசினால் தெளிவடைந்து போலியான தலைவர்களை அடையாளம் காணுவான். அவர்கள் நம்ம பசங்க.. சோசியல் மீடியாவில் தற்குறிகள் என்று அவமானப்படுத்தாதீர்கள்.. அது சங்கிகளின் சதி வேலை.. கணிசமான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வரக் கூடாது என்று சதி செய்கிறார்கள். அதனை உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications