"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி!
சென்னை: காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, முதுகில் குத்திவிட்டதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து திமுக மேற்கொண்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இப்படி பேசுவதை ஏற்க முடியாது
அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 இடங்களில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. 'இந்தக் கூட்டணி அமைப்பில் திமுகவின் வாக்குகளால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள்' என்று தேர்தல் தீர்ப்பு வெளிவந்த பிறகு பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுகவினர் பாடம் கற்கவில்லை
இது திமுகவின் மேலாதிக்க மனோபாவத்தைதான் வெளிப்படுத்துகிறது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகும்கூட திமுகவினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத்தான் மக்கள் விரும்பி ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
மேலும், திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக, விசிக ஒழிக என்று முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சனம் செய்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகமற்ற கோஷங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
திமுகவின் படுதோல்விக்கு என்ன காரணம்?
தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, வெற்றி பெற்ற பிறகு தனித்து ஆட்சியை அமைப்பது, தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுப்பது. இவ்விதம் 60 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தவெக நிகழ்த்திய விசில் புரட்சி மூலம் முறியடித்து காட்டியிருக்கிறது.
தவெகவின் விக்கிரவாண்டி முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அதன் தலைவர் விஜய் பிரகடனம் செய்தார். அதை ஏற்ற தமிழக மக்கள், அமோக ஆதரவோடு தவெகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு வழங்குகிற தவெக தலைவர் விஜய்யின் விரிந்த ஜனநாயக உணர்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாகப் புழுக்கத்தோடு இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெக வழங்கிய ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். இது கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நிகழாத அற்புதமாகும்.
கடும் விளைவுகளை சந்திக்க நேரும்
காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் மு.க.ஸ்டாலின் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது.
1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதும் கிடையாது, வெற்றி பெற்றதும் கிடையாது. எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைப் பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல், மனப்பூர்வமாகத் மதிப்பதோடு, நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்புமீறி இழிவாக விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேருமென்று எச்சரிக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications