அடடே.. இதை பாருங்க! இளம் வயதில் திமுகவுக்காக வாக்கு சேகரித்த உதயநிதி! கலக்கும் பழைய ஃபோட்டோஸ்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சில பழைய படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் பெற்றி பெற்றது.
அப்போதே இளைஞரணி செயலாளர் உதயநிதி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் அது வழங்கப்படவில்லை..

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் அவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவருக்குக் கடந்த 2019 ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்ற அவர், இளைஞரணியை வலுப்படுத்தினார்.

திமுக
திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும் கூட, அவர் அரசியிலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தல் சமயத்திலேயே பிரசாரத்தின் போதே அவரது பேச்சுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுக- பாஜக கூட்டணி முதல் எய்ம்ஸ் மருத்துவமனை வரை அவரது பேச்சுகள் லைக்ஸ்களை அள்ளின.

அமைச்சரவை
சட்டசபைத் தேர்தலில் உதயநிதி வென்ற பின்னர், அமைச்சரவையில் அவர் இடம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. திமுக இளைஞரணி தரப்பில் அன்பில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இருப்பினும், தலைமை சரியான முடிவை எடுக்கும் என்று கூறிய உதயநிதி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை மாநிலத்திலேயே முன்மாதிரியான ஒரு தொகுதியாக மாற்றுவேன் என்று கூறினார்.

திமுக தொண்டர்கள்
திரைப்படத்தில் நடிப்பது ஒரு பக்கம் என்றால் மறுபுறம் தொகுதிக்கு விசிட் அடிப்பது, பொதுமக்கள் உடன் கலந்துரையாடுவது, அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற செயல்பாடுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையே மூன்றாம் கலைஞர் என்று சிலர் உதயநிதியைக் குறிப்பிட்டு பேனர்களை வைத்ததால் சர்ச்சையானது. இதற்குச் சமீபத்தில் பதில் அளித்த அவர், மூன்றாவது கலைஞர் இளம் தலைவர் என்றெல்லாம் என்னை அழைக்க வேண்டாம். அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை.

சின்னவர் ஓகே
கலைஞர் என்றால் அது கருணாநிதி மட்டுமே. எனவே, அப்படி எல்லாம் என்னைக் கூப்பிடக் கூடாது. சின்னவர் என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் திமுகவில் உள்ளனர். எனவே, என்னைச் சின்னவர் என்று அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் கூறி இருந்தார்.

அமைச்சர் பொறுப்பு
சில வாரங்களுக்கு முன்பு, உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தினர். இப்படி யாரும் சொல்லக் கூடாது என்றும் தலைமை சரியான நேரத்தில் முடிவு எடுக்கும் என்றும் உதயநிதி கூறி இருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை இன்னும் கூட முழுமையாக ஓயவில்லை.

குற்றச்சாட்டு
அதேநேரம் உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகள் வழங்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவியும், தேர்தல் போட்டியிடும் வாய்ப்பும் விரைவாக வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை விட சீனியர்கள் பலர் இருக்கும்போது, அமைச்சர் பதவி வழங்கவும் ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின,

உதயநிதி பதில்
இது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் உதயநிதியிடமே கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. அப்போதெல்லாம் அவர், இதற்கு முன்னதாகவும் தேர்தலில் திமுகவுக்குப் பிரசாரம் செய்து உள்ளதாகவும் இருப்பினும் அப்போது ஊடகங்கள் இந்தளவு இல்லை என்பதால் அது சர்ச்சையாக ஆகவில்லை என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களிலும் அவர் திமுகவுக்காகப் பிரசாரம் செய்துள்ளதாகவே அவர் பல நேர்காணல்களில் அழுத்தமாகக் கூறி இருந்தார்.
Recommended Video

ஃபோட்டோக்கள்
இருப்பினும், இதுநாள் வரை அது தொடர்பான படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் உதயநிதியின் பதிலைச் சிலர் சந்தேகப்பட்டனர். இந்தச் சூழலில் கடந்த தேர்தல்களில் உதயநிதி திமுகவுக்காகப் பிரசாரம் செய்யும் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. உதயநிதி பல ஆண்டுகளாகவே திமுகவுக்கு வேலை செய்துள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி என்று உதயநிதி ஆதரவாளர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications