விஜயை சீரியஸாக எடுக்காதீங்க.. திமுகவிடம் பேரத்தை அதிகரியுங்கள்.. டெல்லி காங்கிரஸ் முடிவு! தவெக ஷாக்
சென்னை: ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குரல் கொடுத்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது திமுகவிற்கு காங்கிரஸ் கொடுத்த மறைமுக எச்சரிக்கை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பிம்பமும் 2026 தேர்தல் வியூகங்களும்
நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்தார். அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் பதிவிட்ட ட்வீட், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

1. "தலைவா" - ஒரு புதிய அரசியல் அடையாளம்?
தமிழகத்தில் பொதுவாக ஆளுமை மிக்க பிராந்தியத் தலைவர்களுக்கே "தலைவா" என்ற அடைமொழி பயன்படுத்தப்படும். தற்போது காங்கிரஸார் ராகுல் காந்தியை இந்தப் பெயரால் அழைது வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறுகையில், "இது காங்கிரஸின் வளர்ந்து வரும் லட்சியத்தைக் காட்டுகிறது. திராவிடக் கட்சிகளின் நிழலில் இருக்கும் காங்கிரஸ், தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும் இந்த முயற்சியை மேற்கொள்கிறது.. ராகுலை தலைவா என்று பிராண்டு செய்ய போகிறோம்" என்கிறார்.
2. திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமா?
இப்படிப்பட்ட நிலையில்தான் "தலைவா' விஜய் + "தலைவா" ராகுல் என்ற கூட்டணியை முன்னிறுத்தலாம் என்று சில காங்கிரஸ் தலைகள் நினைக்கிறார்களாம். 1967 முதல் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், தற்போது திமுக-வின் கூட்டணியில்தான் உயிர்வாழ்கிறது. 2021-ல் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
2026 தேர்தலில் கூடுதல் இடங்களையும், ஆட்சியில் பங்கையும் (அமைச்சரவை இடங்கள்) பெறுவதற்கு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) நெருக்கம் காட்டுவது போன்ற ஒரு பிம்பத்தை காங்கிரஸ் உருவாக்குகிறது.
ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது ஒவ்வொரு கட்சியின் விருப்பம். அதுவே கூட்டணிக்கு நிபந்தனை அல்ல என்றாலும், தொண்டர்களின் எதிர்பார்ப்பை மதிக்கிறோம்," என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
3. 'ஜன நாயகன்' - விஜய்க்கு ஆதரவும் ராகுல் அரசியலும்
மத்திய தணிக்கை வாரியம் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி, ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்: "மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடு. தமிழ் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது."
2017-ல் 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோதும் ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாகப் பேசினார். இது அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, ராகுல் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட நட்பு ரீதியிலான உறவையும் காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
4. உண்மை என்ன?
2014-ல் தனித்துப் போட்டியிட்டபோது காங்கிரஸின் வாக்கு சதவீதம் வெறும் 4.5% மட்டுமே. விஜய்யுடன் கைகோர்த்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் எதிர்ப்பையும் காங்கிரஸ் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
18 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 10 எம்.பி-க்களைத் தக்கவைக்க காங்கிரஸ் திமுக-வுடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே, இப்போதைய நகர்வுகள் அனைத்தும் திமுக-விடம் பேரம் பேசுவதற்கான (Bargaining) ஒரு முயற்சியே.
5. திமுக-வின் எதிர்வினை
காங்கிரஸின் இந்த நகர்வுகளை திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திமுக நிர்வாகிகள் தரப்பு கூறுகையில், "தமிழகத்தின் அரசியல் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மை நோக்கம்," எனத் தெரிவித்து உள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்தத் தமிழகப் பயணம் மற்றும் விஜய்க்கு அவர் அளிக்கும் ஆதரவு, 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனது பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) நிலைநிறுத்த எடுக்கும் ஒரு கவனமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மற்றபடி விஜயுடன் கூட்டணி எல்லாம் உண்மை இல்லை.. அதை சீரியஸாக எடுக்க தேவை இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications