நடுவழியில் நிற்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் தருகிறதா? மத்திய அரசு விளக்கம்
சென்னை: இந்தியா முழுவதுமே திடீரென சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது.. அதாவது பெட்ரோல், டீசல் இல்லாமல் நடுவழியில் நிற்கும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் இலவசமாக பெட்ரோல்-டீசல் வழங்குவதாக கூறினார்கள். இது வேகமாக பரவ தொடங்கியதால், இது உண்மையா.. என்னப்பா சொல்றீங்க.. இத்தனை நாட்களாக எனக்கு தெரியாமல் போய்விட்டதே என்று ஆச்சரியமாக மத்திய அரசை நோக்கி கேள்வி கேட்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் மத்திய அரசே விளக்கம் அளிக்க வேண்டிய அளவிற்கு காட்டுத்தீ போல் பரவி உள்ளது. இது பற்றி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் செல்லும் சாலைகள், நாட்டின் பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலைகள், மிக அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாநில சாலைகள் எல்லாமே மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

அந்த வகையில், இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் பராமரித்து வருகிறது. அதேபோல் நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலையை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி, அதனை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச் சாவடிகளில் கட்டணமும் வசூலித்து வருகிறது. ஒவ்வொரு 50 கிமீ அல்லது 40 கிமீயில் முக்கிய நகரங்களை இணைக்கும் பகுதி இருந்தால் அதற்கும் முன்பாகவே கூட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அதேபோல் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலையின் தரம் மற்றும் வசதிகளை அந்தந்த பகுதி சுங்கச்சாவடி பராமரிப்பாளர்கள் மேற்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் இன்றி நடுவழியில் நிற்கும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கி வருவதாக ஒரு தகவல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எரிபொருள் விலை சீரான இடைவெளியில் உயர்ந்து வரும் நிலையில் இந்த தகவல் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்தது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மறுத்து விளக்கம் அளித்துள்ளது. அதில், "சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கப்படுவது இல்லை. அதே சமயத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ரோந்து மற்றும் அவசர உதவிக்குழுவினர் வாகன ஓட்டிகள் எரிபொருள் வாங்கவும், நடுவழியில் நிற்கும் வாகனங்களை இழுவை எந்திரம் மூலம் பெட்ரோல் பங்குக்கு இழுத்து செல்வதற்கும் உதவுவார்கள். ஆனால் எரிபொருளுக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கோ, தனிநபருக்கோ வாகன ஓட்டிகள் கொடுத்துவிடவேண்டும். சுங்கச்சாவடிகள் எரிபொருள் இலவசமாக வழங்குவதாக பரவும் தகவலில் உண்மை இல்லை" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications