பாசத்தில் அப்பாவை மிஞ்சும் பிள்ளைகள்.. விஜயகாந்த்தை 2 மகன்களும் எப்படி பார்த்துக்கிட்டாங்க தெரியுமா?
சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின்போது, மக்களின் அன்பைக் கண்டு கதறி அழுதனர் விஜயகாந்த்தின் மகன்கள். இந்நிலையில், விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் தங்கள் தந்தையை எப்படி பார்த்துக்கொண்டனர் என்பது பற்றி பிரேமலதா பேசிய விஷயம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2 வாரங்களுக்கு முன்பாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டார். அதன்பிறகு தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கும் சென்றார். இந்நிலையில் தான், 27ஆம் தேதி விஜயகாந்த் கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

விஜயகாந்த்தின் மறைவு தேமுதிக தொண்டர்களையும், அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்தின் இரு மகன்களான சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் விஜயகாந்த் உடலைப் பார்த்து கதறி அழுதனர். "அப்பா.. அப்பா.. எழுந்து வாங்கப்பா" என அவர்கள் தேம்பித் தேம்பி அழுத காட்சிகள் பார்ப்போரைக் கலங்க வைத்தது.
இந்நிலையில், நேற்று தீவுத் திடலில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல், பிற்பகலில், அங்கிருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழிநெடுக, மக்கள் திரண்டு, விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். மக்களின் இத்தனை அன்பையும் பார்க்க முடியாமல், விஜயகாந்த், பெட்டிக்குள் படுத்திருப்பதைப் பார்த்து, விஜயகாந்த்தின் மகன்கள் கதறி அழுதனர். மக்களை நோக்கிக் கைகூப்பியபடி, அவர்கள் கண்ணீர் விட்ட காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை கனக்க வைத்தன.
விஜயகாந்த்தின் இரு மகன்களும், அப்பா மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். விஜயகாந்த்தும் அவர்கள் இருவர் மீதும் அப்படித்தான். விஜயகாந்த் உடல் நலிவுற்றது முதலே, அவரை கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை மேற்கொண்டும், அங்கேயே தங்கி பராமரித்துக் கொண்டும் இருந்தனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் ஆசை என்றாலும், அதைப் பற்றி பெரிதாக ஆர்வம் காட்டாமல், விஜயகாந்த் உடல்நலனை தேற்றுவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர்.

விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் பற்றி பிரேமலதா முன்பு ஒரு பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார். சில சமயங்களில் கேப்டன் விஜயகாந்த் சாப்பிட முடியாமலும், டாய்லெட் போக முடியாமலும் கஷ்டப் பட்டிருக்கிறார். அப்போது எல்லாம் அவரை டாய்லெட்டுக்கு அழைத்து செல்வது தொடங்கி, சுத்தம் செய்வது வரை எல்லாமே எனது இரண்டு பிள்ளைகளும் தான். ஒரு முறை கூட இதில் அவர்கள் அதிருப்தி அடைந்ததே இல்லை.
எங்க அப்பாவுக்கு நாங்கதான் செய்வோம் என இருவருமே பாசமாக கேப்டனை பார்த்துக் கொள்வார்கள். அமெரிக்காவில் மருத்துவமனையில் என் மகன்கள், கேப்டனை இப்படி கவனிப்பதை அங்கிருந்த மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். அமெரிக்காவில் எல்லாம் பிள்ளைகள், தங்கள் அப்பா அம்மாவை எல்லாம் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். ஒரு வயது வரை தான் கூடவே இருப்பார்கள்.
கேப்டனை, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் தாங்கித் தாங்கி கவனிப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்த தாய்மார்கள் என்னிடம் வந்து, "உங்க ரெண்டு பசங்களை பார்த்ததற்கு பிறகு எங்க பிள்ளைகள் அடுத்த ஜென்மத்திலாவது இந்தியாவில் பிறக்க வேண்டும் என நாங்க ஆசைப்படுகிறோம்" எனக் கூறியதாக பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications