முரல் மீனும் வரல.. நெத்திலி தந்த நிம்மதி.. சென்னை காசிமேட்டில் விழுந்த கேரளா இடி.. கடல்லயே இல்லையாமே
சென்னை: மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், அடுத்த அதிர்ச்சி மீன்பிரியர்களுக்கு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது.. இதனால், மீன்களின் வரத்து வழக்கத்தைவிடவும் குறைவாக உள்ளது.. அதேபோல, குறைந்த ஆழத்தில் மீன்களை மீனவர்கள் பிடித்து வருவதால், மீன்களின் விலையும் டபுள் மடங்காக எகிறியிருக்கிறது.

அந்தவகையில், சென்னை காசிமேட்டிலும் மீன்கள் வரத்து குறைந்தே காணப்படுகின்றன. வஞ்சரம், சங்கரா, வவ்வால், கொடுவா, நண்டு, காணங்கத்தை, இறால் மீன்களைவிட, ஷீலா மீன்கள் விலை குறைந்து காணப்படுவால், இந்த மீனையே அதிகம் வாங்கி வருகிறார்கள் மீன்பிரியர்கள்.
வஞ்சிரம்: அதிலும், வஞ்சிரம், வவ்வால் போன்ற பெரிய மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டதால், இதை கண்ணில் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டதாம். தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரளாவில் இருந்து மீன்கள் வந்து கொண்டிருந்தன.. எனவே, நிலைமையை ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடிந்தது. இப்போது விஷயம் என்னவென்றால், கேரளாவிலும் மீன்பிடித் தடைக்காலம் தற்போது அமலுக்கு வந்துவிட்டது.
இதன் காரணமாக, சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரிய மீன்களின் வரத்து சர்ரென குறைந்துவிட்டது.. சாளை, நெத்திலி, சங்கரா, இறால் போன்ற சிறிய மீன்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால், பெரிய மீன்களை வாங்க சென்ற மீன் பிரியர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
முரல் மீன்கள்: முரல் மீன்கள்கூட விலை அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே, கலிங்க முரல் கிலோ ரூ.350-லிருந்து ரூ.500-க்கும், வாடுமுரல் ரூ.260-லிருந்து ரூ.350-க்கும் உயர்ந்திருந்த நிலையில், நேற்றைய தினம் இந்த மீன்கள் கண்ணிலேயே அவ்வளவாக தட்டுப்படவில்லையாம்.
உக்கடம் மார்க்கெட்: கோவையிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. காரணம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தே, புகழ்பெற்ற உக்கடம் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரும்.. இதுபோக கேரளாவிலிருந்தும் மீன்கள் வருவது வாடிக்கையாகும்.
இப்போது, கேரளாவிலும் தடைக்காலம் என்பதால், உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துவிட்டது. பெரிய மீன்களின் வரத்தும் வெகுவாக நின்றுவிட்டது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் வரும் ஜுன் 16-ம் தேதி முடிவடைந்த பிறகு தான் பெரிய மீன்களின் வரத்து இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
கவலை: ஏற்கனவே மீன்கள் விலை உயர்வால், மீன்பிரியர்கள் நொந்துபோயுள்ள நிலையில், சிக்கன் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.. வருகிற 16ம் தேதி வரை, சிக்கன் விலையில் இன்னும் விலை உயர்வு இருக்கலாம் என்பதால் அசைவ பிரியர்கள் உச்சக்கட்ட கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications