திடீர் திடீர்னு வெடிக்குதாம்.. உயிருக்கு உலை வைக்கும் ஏசி! வெப்ப அலை காரணமா? உஷார் மக்களே!
புதுடெல்லி: கோடை வெயிலில் நிம்மதிக்காக பயன்படுத்தப்படும் ஏர் கண்டிஷனர் (ஏசி), தற்போது பல இடங்களில் உயிருக்கு ஆபத்தான சாதனமாக மாறி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் இந்தியா கடுமையான வெப்ப அலையை சந்தித்து வரும் நிலையில், டெல்லி, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏசி வெடிப்பு மற்றும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன? இதற்கு என்ன காரணம்? எப்படி தவிர்க்கலாம்? என்பது குறித்து பார்க்கலாம்..
சமீபத்தில் டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ஏசி வெடித்ததாக சந்தேகிக்கப்படும் தீ விபத்தில் உயிரிழந்தார். அதேபோல் விவேக் விஹார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரு சம்பவத்திற்கும் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள உயரமான குடியிருப்புகளிலும் ஏசி வெடிப்பு காரணமாக குடியிருப்பவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஏசி வெடிப்பு
இந்தியாவில் கோடை காலத்தில் பல மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டுவது வழக்கமாகி விட்டது. இந்த ஆண்டு எல் நினோ தாக்கம் காரணமாக வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது. இரவு நேரத்திலும் வெப்பம் குறையாததால், மக்கள் ஏசியை பல மணி நேரம் தொடர்ந்து இயக்குகின்றனர். ஏசியின் வெளிப்புற கம்ப்ரசர் தொடர்ந்து அதிக வெப்பத்தில் இயங்கும்போது, அதிலிருந்து வெளியேற வேண்டிய வெப்பம் சரியாக வெளியேற முடியாமல் போகிறது.
வெப்ப அலை
இதனால் கம்ப்ரசர் அதிக அழுத்தத்தை சந்தித்து சூடேறுகிறது. இதுவே சில நேரங்களில் மின்கசிவு அல்லது தீ விபத்துக்கு வழிவகுக்கிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலான குடும்பங்கள் பகல், இரவு என இடைவிடாமல் ஏசியைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பல ஏசிகள் ஒரே நேரத்தில் இயங்குவதால் மின்சார கண்ட்ரோலர் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது.

கம்ப்ரசர்
வெளிப்புற ஏசி இயந்திரத்தை சுற்றி போதிய காற்றோட்டம் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பால்கனி அல்லது குறுகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏசிகளுக்கு வெப்பத்தை வெளியேற்ற போதிய வசதி இல்லாததால், கம்ப்ரசரின் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஏசி வெடிப்பு சம்பவங்களில் அதிகமாகக் காணப்படும் பொதுவான காரணம், முறையான பராமரிப்பு இல்லாததுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவிர்ப்பது எப்படி?
வருடத்திற்கு ஒரு முறையாவது ஏசியை முழுமையாக பரிசோதித்து சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பலர் பல ஆண்டுகளாக சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் தூசி படிந்த வடிகட்டிகள், குளிரூட்டும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, குளிரூட்டும் வாயு கசிவு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. குளிரூட்டும் வாயு கசிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதை சரிசெய்யாமல் மீண்டும் வாயு நிரப்புவது மிகவும் ஆபத்தானது. மின்கசிவு ஏற்பட்டால் அந்த வாயு தீப்பற்றும் அபாயமும் உள்ளது.
அதிக மின்சுமை
டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் பெரும்பாலானவை மின்சார கோளாறுகளால் தான் ஏற்படுகின்றன. பழைய வீடுகளில் உள்ள மின்கம்பிகள் தற்போதைய அதிக மின்சார சுமையை தாங்கும் வகையில் அமைக்கப்படவில்லை. தரமற்ற வயர்கள், மலிவான எக்ஸ்டென்ஷன் போர்டுகள், மின்னழுத்த ஏற்ற இறக்கம், சரியான பாதுகாப்பு கருவிகள் இல்லாமை ஆகியவை ஏசி இயங்கும் போது ஆபத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக உயரமான குடியிருப்புகளில் ஒரே நேரத்தில் பல ஏசிகள் இயங்குவதால் மின்கம்பிகளில் அதிக மின்சுமை ஏற்பட்டு தீ விபத்து உருவாகும் அபாயம் உள்ளது.
மின்சார இணைப்புகள்
நிபுணர்கள் கூறும் பரிந்துரைகளின்படி, கோடை தொடங்கும் முன்பே ஏசியை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். கம்பிரசர், குளிரூட்டும் குழாய்கள், மின்சார இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஏசியை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைத்துப் பயன்படுத்துவது மின்சார செலவையும் குறைக்கும். அதே நேரத்தில் இயந்திரத்தின் மீது தேவையற்ற அழுத்தமும் ஏற்படாது. வெளிப்புற ஏசி இயந்திரத்தை சுற்றி போதிய இடைவெளி இருக்க வேண்டும்.
ஏசி பயன்பாடு
மேலும் தரமான நிறுவனங்களின் பாதுகாப்பு தரச்சான்று பெற்ற ஏசிகளை மட்டுமே வாங்க வேண்டும். மின்சார அமைப்புகளையும் அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 2026-ம் ஆண்டின் கடுமையான வெப்ப அலை, ஏசி பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பராமரிப்பு குறைபாடு, பழைய மின்சார சாதனங்கள், அதிக வெப்பம், நகர்ப்புற நெரிசல் ஆகியவை இணைந்து பாதுகாப்பு சவாலையும் உருவாக்கியுள்ளன.
வெப்ப அலைகள்
காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் வெப்ப அலைகள் மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர். எனவே ஏசியை ஒரு சாதாரண வீட்டு உபகரணமாக அல்லாமல், முறையான பராமரிப்பு தேவைப்படும் மின்சார இயந்திரமாக கருதி பயன்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளையும், தீ விபத்துகளையும் தவிர்க்க முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.














Click it and Unblock the Notifications