திமுக மறுபடியும் செய்யும் தவறு.. மறுசீரமைப்பு குழுவில் இளைஞர்களே இல்லை!
சென்னை: தமிழ்நாடு தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை மொத்தமாக மாற்றி அமைக்க ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இதற்காக திமுக சார்பில் மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு இன்று வந்தது. இருப்பினும், அறிவிப்பு வந்தவுடனேயே இதில் இளைஞர்கள் யாரும் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையோடே திமுக தேர்தலைச் சந்தித்தது. இருப்பினும், எதிர்பாராத விதமாக மோசமான தோல்வியைத் தழுவியது. திமுக வெறும் 59 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கூட கொளத்தூரில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

திமுக அமைத்த குழு
இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தவெக, தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்துள்ளது. இந்த முடிவுகளுக்குப் பிறகு தேர்தல் தோல்வி குறித்து ஆராயும் நடவடிக்கையில் திமுக இறங்கியது. இதற்காக விரிவான கள ஆய்வு நடத்தப்பட்டது. 19 குழுக்களை அமைத்து, 38 நிர்வாகிகள் மூலம் தொகுதி வாரியாக தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறியும் முயற்சி நடத்தப்பட்டது.
திமுகவில் இல்லாதோரின் கருத்துகளை அறிய 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டது. அதில் இருந்து சுமார்6 லட்சம் ஆலோசனைகள் கிடைத்தாக திமுக வட்டாரங்கள் கூறுகிறது. இந்தச் சூழலில் காலத்திற்கு ஏற்ப திமுகவை மறுசீரமைக்கவும் புதுப்பிக்கவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேர் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார்.
இளைஞர்களே இல்லை
இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், அந்த அறிவிப்பு வந்தவுடனேயே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனென்றால் இந்த தேர்தலில் Gen Z இளைஞர்கள் மொத்தமாக தவெக பக்கம் சென்றதே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஸ்டாலின் அமைத்துள்ள இந்த மறுசீரமைப்பு குழுவில்.. 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதைச் சுட்டிக்காட்டியே நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
ஸ்டாலின் அறிவித்துள்ள குழுவில் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், தமிழரசி இரவிக்குமார், எம்.எம். அப்துல்லா, இ. பரந்தாமன், ச. முரசொலி, டாக்டர் எழிலன், எஸ்.கே.பி. கருணா ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இளைஞர்கள் எதிர்பார்ப்பு
இவர்கள் அனைவரும் கட்சியில் ஏற்கனவே பல பதவிகளை வகித்த மூத்த மற்றும் நடுத்தர வயதுடைய தலைவர்களே தவிர, புதிய தலைமுறையைப் பிரதிபலிக்கும் இளம் தலைவர்கள் யாரும் இதில் இல்லை. அப்படியிருக்கும்போது இளைஞர்களின் சிந்தனைகளும், நவீன உலகிற்கு ஏற்ப அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களையும் இந்த குழுவில் இருப்பவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ளது நல்லது தான் என்றாலும் பழைய முகங்களைப் பக்கமே மீண்டும் செல்வது திமுக செய்யும் தவறு என்று அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர். மாற்றத்தை விரும்பிய இளம் வாக்காளர்களை ஈர்த்து தவெக ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், திமுக இந்த முறையும் கோட்டை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
விமர்சனம்
இந்த 10 பேர் கொண்ட குழு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் தங்களது பரிந்துரைகளைத் தலைமையிடம் வழங்க வேண்டும். திமுக மாவட்டங்களின் எல்லைகளை மறுவரையறை செய்தல், கட்சியின் சார்பு அணிகள் மற்றும் தேர்தல் பணிக்குழுக்களைச் சீரமைத்தல், தேர்தல் பணிகளுக்கான நிரந்தர கட்டமைப்பு மற்றும் தலைமைக்கு வழிகாட்டும் சிந்தனை வங்கி அமைப்பை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் இந்த குழு பரிந்துரையை வழங்கவுள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழுவில் இன்றைய 2K கிட்ஸ் (2K Kids) அல்லது 30 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்களின் நேரடிப் பங்களிப்பு இல்லாதது, இந்த மறுசீரமைப்பின் நோக்கத்தையே பலவீனப்படுத்துவதாக முணுமுணுப்புகள் எழுந்துள்ளன.














Click it and Unblock the Notifications