வண்டிய எடுங்கலே.. படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுவோம்! பாதாளத்தில் தங்கம்! 13 வருடத்தில் முதன்முறை!
வாஷிங்டன்: உலகளாவிய தங்கச் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த காலாண்டில் தங்கம் மிகப்பெரிய சரிவை பதிவு செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் போது ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 0.2 சதவீதம் குறைந்து 4,008.94 அமெரிக்க டாலராக இருந்தது. வர்த்தகத்தின் போது கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்த நிலைக்கும் தங்கம் சென்றது.

ஜூன் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 11 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தக விலையும் 0.4 சதவீதம் குறைந்து 4,022.70 டாலராக இருந்தது.
தங்கம் விலை
இதன் மூலம், 2024-க்கு பிறகு முதல் முறையாக ஒரு காலாண்டில் தங்கம் சரிவை சந்திக்கிறது. மேலும், 2013-ம் ஆண்டு ஜூன் காலாண்டுக்குப் பிறகு இது மிகப்பெரிய காலாண்டு சரிவாக இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்வார்கள். ஆனால், வட்டி விகிதங்கள் உயர்ந்தால் வட்டி வருமானம் தராத தங்கத்தில் முதலீடு செய்வது குறையும். அதனால் தங்கத்தின் விலை அழுத்தத்தை சந்திக்கிறது.
தங்கம் விலை சரிவு
இதுகுறித்து சந்தை ஆய்வாளர் எட்வர்ட் மெயர் கூறுகையில், மத்திய கிழக்கு பதற்றம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்ற கவலை சந்தையில் இருப்பதாகவும், அதே நேரத்தில் அமெரிக்க மத்திய வங்கி கடுமையான பணவியல் கொள்கையை தொடரும் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் சென்றிருந்தாலும், ஈரான் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கத்தார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு பதற்றம்
இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாக தணியவில்லை என்ற அச்சம் நீடிக்கிறது. அமெரிக்காவில் பணவீக்கமும் இன்னும் மத்திய வங்கியின் 2 சதவீத இலக்கை விட அதிகமாகவே உள்ளது. இதனால், வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையில் தொடரலாம் என்றும், தேவைப்பட்டால் மீண்டும் உயர்த்தப்படலாம் என்றும் சந்தைகள் கணித்து வருகின்றன. சந்தை கணிப்புகளின்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு சுமார் 65 சதவீதம் இருப்பதாக முதலீட்டாளர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி
இதற்கிடையில் வெளியாக உள்ள தனியார் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு அறிக்கை ஆகியவை மத்திய வங்கியின் அடுத்தகட்ட முடிவுக்கு முக்கிய அடிப்படையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், சர்வதேச நாணய மற்றும் நிதி அமைப்புகள் மன்றம் நடத்திய ஆய்வில், அடுத்த பத்து ஆண்டுகளில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் அமெரிக்க டாலர் கையிருப்பை குறைத்து, அதற்குப் பதிலாக தங்க இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெள்ளியின் விலை
உலக அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நீண்ட கால பாதுகாப்பு சொத்தாக தங்கத்தை பல நாடுகள் பார்க்கத் தொடங்கியுள்ளன. தங்கம் மட்டுமல்லாமல் மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை 0.8 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸுக்கு 58.25 டாலராக இருந்தது. இது 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பிறகு வெள்ளிக்கான மிகப்பெரிய காலாண்டு சரிவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், பிளாட்டினத்தின் விலை 0.7 சதவீதம் குறைந்த நிலையில், பலாடியத்தின் விலை மட்டும் லேசாக உயர்ந்தது. இருப்பினும், இந்த இரண்டு உலோகங்களும் மாதாந்திர மற்றும் காலாண்டு அடிப்படையில் இழப்பை பதிவு செய்யும் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications