சட்டசபையில் MLAக்கள் கடைபிடிக்க வேண்டிய ரூல்ஸ் தெரியுமா? சபாநாயகரை வணங்காமல் இன் -அவுட் கிடையாது!
சென்னை: சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ரூல்ஸ்களை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தையும் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியெல்லாம் இங்கே பார்க்கலாம்.
*ஓர் உறுப்பினர் அவையினுள் நுழைந்து இருக்கையில் அமருகையிலும் இருக்கையைவிட்டு வெளியே செல்லுகையிலும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று பேரவைத் தலைவரை நோக்கி வணங்கி மரியாதை செலுத்த வேண்டும்.

*பேரவைத் தலைவர் இருக்கைக்கும் உரையாற்றிக் கொண்டிருக்கும் உறுப்பினருக்கும் இடையில் சபாநாயகர் பார்வையை மறைக்கும் வகையில் குறுக்கே செல்லக் கூடாது.
*இருக்கையில் அமைதியாக இருத்தல் வேண்டும், தேவையெனில், தனது இருக்கைக்கு அருகில் உள்ள வாயிலின் வழியாக அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏதும் ஏற்படுத்தாமல் வெளியே செல்லலாம்.
*பேரவைக் கூட்டம் தொடங்குகையில் பேரவைக்குத் தலைமை வகிப்பவர் பேரவைக்குள் நுழையும்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
*பேரவைத் தலைவர் தனது இருக்கையில் அமர்ந்த பின்புதான் மற்றவர்கள் தங்கள் இருக்கையில் அமர்வது மரபாகும். பேரவையில் பேரவைத் தலைவர் உரையாற்றும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்கவோ, பேரவையை விட்டு வெளியேறவோ கூடாது.
*பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று ஓர் உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒழுங்கற்ற சொற்களாலோ அல்லது கூச்சல் அல்லது முறையற்ற வேறு வகைகளிலோ அவரை இடைமறித்தல் கூடாது.
*பேரவையின் அலுவல் பற்றியன்றி, உறுப்பினர்கள் செய்தித்தாள்களையோ, இதழ்களையோ, நூல்களையோ படித்தல் கூடாது.
*அவையின் புறத் தாழ்வாரங்களில் (Lobbies) இருக்கும் உறுப்பினர்கள் பேரவையின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் உரக்கப் பேசுவதோ, சிரிப்பதோ கூடாது.
*தடை செய்யப்பட்ட பொருட்களையோ, அபாயகரமான பொருட்களையோ மற்றும் பேரவைத் தலைவரின் முன் அனுமதியின்றி காட்சிப் பொருளாக அவையில் காண்பிக்க எப்பொருளையும் கொண்டு வரக் கூடாது.
*பேரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கவோ வேறு வகையான ஒலிகளாலோ அல்லது வேறு வகையிலோ இடைமறிக்கவோ கூடாது. மேலும் பேரவையின் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது நேர்முக வர்ணனைகள் செய்யக்கூடாது.
*பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் பேரவை மாடங்களில் உள்ள வெளியார்கள் பற்றி ஏதும் குறிப்பிடுதல் கூடாது. வெளியார்கள் பார்வையாளர் மாடத்தில் இருக்கும்போது பேரவைத் தலைவர் குறிப்பிட்டாலன்றி அவர்களை வரவேற்கும் வகையில் ஆரவாரம் செய்யக் கூடாது.
*சட்டமன்ற உறுப்பினர்கள் கைபேசியை பேரவைக்குள் கொண்டு வரக் கூடாது.பேரவைத் தலைவரின் முன் அனுமதியின்றி விவாதத்திற்கு வலுசேர்க்க ஆதரமாக எதனையும் பேரவையில் காட்சிப் பொருளாக காண்பிக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications